ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு துண்டு கட்டிக்கொண்டு மனு கொடுக்க வந்த விவசாய தொழிலாளர்கள்

வறட்சி நிவாரணம் கேட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு துண்டு கட்டிக்கொண்டு விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்க வந்தனர்.

Update: 2017-03-02 23:00 GMT
ஈரோடு,


மொடக்குறிச்சி, விளக்கேத்தி, விஜயநகர், மண்கரடு போன்ற பகுதிகளை சேர்ந்த 75–க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள், அருந்ததியர் இளைஞர் பேரவையின் மாநில அமைப்பாளர் என்.ஆர்.வடிவேல் தலைமையில் நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதில் 3 விவசாய தொழிலாளிகள் சட்டை அணியாமல், துண்டு கட்டிக்கொண்டு தோளில் மண்வெட்டிகளை மாட்டியபடி வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாய கூலி தொழிலாளர்களாகிய நாங்கள் குடும்பம் நடத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

நிவாரணம்


நிலம் உள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் மற்றும் வட்டியில்லாத கடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படுகிறது. ஆனால் நிலம் இல்லாத விவசாய கூலி தொழிலாளர்கள் குடும்பத்துக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்படுவதில்லை.

எனவே விவசாய தொழிலாளர்கள் குடும்பத்தை காப்பாற்ற, ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் வட்டி இல்லாத கடன் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.

மேலும் செய்திகள்