கார் விற்பனை கடைகளில் பணம்– ஆவணங்கள் திருட்டு மர்மநபர்களை போலீஸ் தேடுகிறது

பாவூர்சத்திரம் அருகே கார் விற்பனை கடைகளில் பணம்– ஆவணங்கள் திருட்டு போனது.

Update: 2017-03-02 22:15 GMT
பாவூர்சத்திரம்,

கார் விற்பனை கடை


பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரை சேர்ந்தவர் ராமராஜா. இவர் நெல்லை– தென்காசி ரோட்டில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் பழைய கார்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ‌ஷட்டர் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ.17 ஆயிரத்து 300 திருட்டு போய் இருந்தது. மர்மநபர்கள் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து பணத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. பிரமுகர்


அதேபோல் கீழப்பாவூரை சேர்ந்தவர் மதியழகன். அ.தி.மு.க. பிரமுகரான இவர், அருணாப்பேரி விலக்கில் பழைய கார்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு இவரது கடையிலும் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கடைக்குள் புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பழைய கார்களின் 12 ஆர்.சி. புத்தகத்தையும் அவர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

நகைகள் திருட்டு


இதேபோல் பாவூர்சத்திரம் செட்டியூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் பழைய இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுசிலா. நேற்று முன்தினம் மாலையில் அவர் கோவிலுக்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தார். பீரோவில் இருந்த 21 கிராம் தங்க நகைகள், 80 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருந்தது.

இந்த 3 திருட்டு சம்பவங்கள் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்