திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவிலில் மாசிமக பெருவிழா

திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவிலில் மாசிமக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2017-03-02 22:30 GMT
திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள திரு மழபாடியில் மிகவும் பிரசித்தி பெற்ற சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசிமக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை விநாயகர், சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய சாமி சிலைகளை மலர்களால் அலங்கரித்து கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலின் முன்பகுதியில் உள்ள கொடிமரத்தின் முன்பு வைத்தனர்.

கொடியேற்றம்

தொடர்ந்து, கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், விபூதி, களபம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நாணல் புல் மற்றும் மலர்களால் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டது. அதன்பிறகு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, நாதஸ்வர இசையுடன் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள், ‘ஓம் நமசிவாய... சிவாய நம...’ என்று பக்தி கோஷம் எழுப்பினர். இதில் திருமானூர், கீழப்பழுவூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. இதில் உலக உயிர்கள் மேன்மையடையவும், அனைத்து உயிர்களும் எல்லா நன்மைகளும் பெற்று பசி, பஞ்சம் இன்றி உலகம் தழைத்தோங்கவும், நல்ல மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் இந்த மாசிமக பெரு விழா நடைபெறுவதாக கூறப்பட்டது.

தேரோட்டம்

தொடர்ந்து இரவு மஞ்சத்தில் சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலு வலர் அனிதா மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர். வருகிற 8-ந்தேதி சுவாமிகள் திருக்கல்யாணமும், 10-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டமும் நடை பெறுகிறது. 

மேலும் செய்திகள்