கரூர் மாவட்டத்தில் 11,482 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்

கரூர் மாவட்டத்தில் 11,482 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். 84 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Update: 2017-03-02 22:45 GMT
கரூர்,

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அதன்படி கரூர் மாவட்டத்தில் 104 பள்ளிகளில் இருந்து 5,482 மாணவர்கள், 5,990 மாணவிகள் என 11,472 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதில் 84 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதன்படி 11,388 மாணவ- மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 94 பேர் என கரூர் மாவட்டம் முழுவதும் 11,482 பேர் எழுதினர்.

கரூர் சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பார்வையற்ற மாணவர் சூர்யாவுக்காக, ஆசிரியை கிருஷ்ணவேணி தேர்வு எழுதினார். கேள்வியை படித்ததும் அதற்கான பதிலை மாணவர் கூறும்போது, அதை ஆசிரியை விடைத்தாளில் எழுதினார்.

பார்வையிட்டார்

தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களை கண்காணிக்க 34 முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள், 9 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 34 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். 80 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் 660 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். கரூர் மாவட்டத்திற்கு வழிகாட்டி அலுவலராக நியமிக்கப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் ராதா கிருஷ்ணன் பல்வேறு தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

தியானம் செய்தனர்

முன்னதாக தேர்வு எழுதும் முன்பு மாணவ- மாணவிகள் பலர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். அதேபோன்று பெற்றோர், ஆசிரியரிடம் ஆசி பெற்றனர்.காலை 8.30 மணியில் இருந்து அவரவர் தேர்வு மையங்களுக்கு மாணவ- மாணவிகள் சென்றனர். பின்னர் அவர்களுக்கு எந்த அறை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை பார்வையிட்டனர். பின்னர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து இறுதியாக பாட புத்தகத்தை எடுத்து படித்தவற்றை ஒரு முறை நினைவுபடுத்தி கொண்டனர். இதில் கரூர் பரணிபார்க் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பள்ளி முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியம், செயலாளர் பத்மாவதி மோகனரங்கன் ஆகியோர் நேரில் வந்து தேர்வு குறித்து அறிவுரை வழங்கினர். பின்னர் அனைவரும் ஒரு நிமிடம் கண்ணை மூடி தியானம் செய்தனர். அதன் பிறகு அவர்கள் தேர்வு அறைக்கு சென்றனர். தேர்வு காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது.

அதன்படி நேற்று மதியம் தேர்வு எழுதி விட்டு கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முக மலர்ச்சியுடன் அறையை விட்டு வெளியில் வந்தனர். அவர் களிடம் கேட்டபோது, தமிழ் முதல் தாள் மிகவும் எளிதாக இருந்தது. அதிக மதிப்பெண் வரும் என்று கூறினர்.

மேலும் செய்திகள்