திண்டுக்கல் மாவட்டத்தில் 22,282 பேர் பிளஸ்–2 தேர்வு எழுதினர்
திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வை 22 ஆயிரத்து 282 பேர் எழுதினர்.
திண்டுக்கல்,
பிளஸ்–2 தேர்வுதிண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 22 ஆயிரத்து 483 பேர் பிளஸ்–2 படித்து வருகிறார்கள். இவர்களில் 10 ஆயிரத்து 425 மாணவர்களும், 12 ஆயிரத்து 58 மாணவிகளும் அடங்குவர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பிளஸ்–2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது.
மாணவர்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் பிளஸ்–2 தேர்வுக்கு முக்கிய பங்கு உண்டு. இதனால் மாணவ, மாணவிகள் கடுமையாக உழைத்தனர். நேற்று முதல் தேர்வை சந்திக்க இருந்ததையொட்டி, திண்டுக்கல் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலரும் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபட்டனர். அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டிக்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பிளஸ்–2 பொதுத்தேர்வுக்காக திண்டுக்கல், பழனி உள்பட 66 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் நேற்று நடந்த தமிழ் முதல்தாள் தேர்வில் 22 ஆயிரத்து 282 பேர் பங்கேற்றனர். அனைவரும் ஆர்வமாக தேர்வை எழுதினர்.
திடீர் சோதனைமுன்னதாக 66 தேர்வு மையங்களுக்கும் 11 வினாத்தாள் மையங்களில் இருந்து வினாத்தாள்கள் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன. இதே போல, அனைத்து தேர்வு மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெளிநபர்கள் யாரும் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதைத்தவிர 6 பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் திடீர் சோதனை நடத்தினர். 130 நிலையான படையினரும் தேர்வு மையங்களில் ரோந்து சென்ற வண்ணம் இருந்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினியும் தேர்வை பார்வையிட்டார்.
இந்த தேர்வில் முறைகேடு செய்ததாக யாரும் சிக்கவில்லை. தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் அனைத்தும் திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் உள்ள விடைத்தாள் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன. இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது.