திருப்பூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூண்டு, புளி விலை சரிவு பருப்பு, மிளகாய் வத்தல் விலையும் குறைந்தது

திருப்பூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூண்டு, புளி விலை சரிவடைந்துள்ளது.

Update: 2017-03-02 22:45 GMT

திருப்பூர்,

பூண்டு விலை சரிவு

திருப்பூர் மார்க்கெட்டுக்கு குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பூண்டு விலை குறைந்து கடந்த மாதம் ரூ.200–க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ முதல் ரக நாட்டு பூண்டு தற்போது 150–க்கும், ரூ.60–க்கு விற்பனை செய்யப்பட்ட 2–ம் ரக பூண்டு ரூ.40–க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஊட்டியில் மலைப்பூண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதால் அனைத்து பகுதிகளுக்கும் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த மாதம் கிலோ ரூ.180–க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மலைப்பூண்டு தற்போது கிலோ ரூ.130–க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோல் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் புளி ஒரு கிலோ ரூ.120–ல் இருந்து ரூ.100 ஆகவும், தும்கூரில் இருந்து வரும் புளி ஒரு கிலோ ரூ.180–ல் இருந்து ரூ.160 ஆகவும் குறைந்துள்ளது.

மிளகாய்வத்தல் விலை குறைந்தது

இதே போல ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்படும் மிளகாய் வத்தல் வரத்து அதிகரிப்பால் முதல் ரகம் ரூ.120–லிருந்து ரூ.100 ஆகவும், 2–ம் ரகம் ரூ.80–லிருந்து ரூ.60 ஆகவும் விலை குறைந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து விற்பனைக்கு வரும் தனியா(கொத்தமல்லி) முதல் ரகம் கிலோ ரூ.150–ல் இருந்து ரூ.125 ஆகவும், 2–ம் ரகம் ரூ.100–லிருந்து ரூ.85 ஆகவும் குறைந்துள்ளது.

மேலும் மராட்டியம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வரும் துவரம் பருப்பு வரத்து அதிகரித்துள்ளதால், கடந்த மாதம் ரூ.180–க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு தற்போது ரூ.100–க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல் அனைத்து ரக பருப்பு வகைகளும் 15 சதவீதம் வரை விலை குறைந்துள்ளது.

இது குறித்து திருப்பூர் மளிகை மொத்த வியாபாரிகள் சங்க செயலாளர் சிதம்பரம் கூறும் போது, பருப்பு உள்ளிட்ட அனைத்து மளிகை பொருட்களின் வரத்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விலையும் இன்னும் குறைய வாய்ப்புள்ளது என்றார்.

மேலும் செய்திகள்