பிளஸ்–2 தேர்வை 46 ஆயிரத்து 887 மாணவ – மாணவிகள் எழுதினர்

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வை 44 ஆயிரத்து 887 மாணவ – மாணவிகள் எழுதினர். 816 பேர் தேர்வு எழுதவரவில்லை.

Update: 2017-03-02 21:30 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வை 44 ஆயிரத்து 887 மாணவ – மாணவிகள் எழுதினர். 816 பேர் தேர்வு எழுதவரவில்லை.

பிளஸ்–2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. வேலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 162 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 450 மாணவர்களும், 12 ஆயிரத்து 321 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 771 பேர் எழுதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 170 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 460 மாணவர்களும், 11 ஆயிரத்து 485 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 945 பேர் தேர்வு எழுத இருந்தனர். இரண்டு கல்வி மாவட்டங்களையும் சேர்த்து 44 ஆயிரத்து 716 மாணவ– மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

46,887 பேர் எழுதினர்

இவர்களுக்காக வேலூர் கல்வி மாவட்டத்தில் 79 தேர்வு மையங்களும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 66 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர 2,987 பேர் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதினர்.

வேலூர் கல்வி மாவட்டத்தில் 612 பேர், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 204 பேர் என மொத்தம் 816 மாணவ– மாணவிகள் முதல்நாளான நேற்று தேர்வு எழுதவரவில்லை. இதனால் வேலூர் மாவட்டத்தில் முதல்நாளான நேற்று 46,887 பேர் பிளஸ்–2 தேர்வு எழுதினர்.

மாற்றுத்திறனாளி மாணவ – மாணவிகள் 131 பேர் நேற்று பிளஸ்–2 தேர்வு எழுதினர். அவர்களில் 73 பேர் மெதுவாக எழுதும்திறன் கொண்டவர்கள் என்பதால் அவர்களுக்கு கூடுதலாக ஒருமணி நேரம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் பிற்பகல் 2 மணி வரை தேர்வு எழுதினர். அதே போன்று 41 பேருக்கு அவர்கள் சொல்வதை எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

கலெக்டர் பார்வையிட்டார்

பிளஸ்–2 பொதுத்தேர்வு பணிக்காக 145 துறை அலுவலர்கள், 300 பேர் கொண்ட பறக்கும் படை, 2,500 உதவி கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. பறக்கும்படையினர் தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வில் மாணவ – மாணவிகள் காப்பியடிக்கிறார்களா என்பதை கண்காணித்தனர். வேலூர் நகரில் உள்ள தேர்வு மையங்களுக்கு கலெக்டர் ராமன் நேரில் சென்று பார்வையிட்டார்.

முதல்நாள் என்பதால் மாணவ– மாணவிகள் பள்ளி மற்றும் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்வு எழுத சென்றனர்.

மேலும் செய்திகள்