ஆசிரியர் தகுதி தேர்வுக்கு யூனியன் வாரியாக விண்ணப்பங்கள் கிடைக்கும் மையங்கள் அறிவிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் வருகிற 6–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை வினியோகம் செய்யப்பட உள்ளன.
ராமநாதபுரம்,
ஆசிரியர் தகுதித் தேர்வு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்விற்கான விண்ணப்பங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 6–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை தேர்வு செய்யப்பட்ட மையங்களில் வினியோகம் செய்யப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் அரசின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர் தகுதி தேர்வு தாள்–1 மற்றும் தாள்– 2 ஆகிய தேர்வுகள் வருகிற 29.4.2017 மற்றும் 30.4.2017 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 யூனியன்களில் வருகிற 6–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை இந்த தேர்விற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும் மையங்கள் யூனியன் வாரியாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி ராமநாதபுரம் யூனியனில் ராமநாதபுரம் ராஜா தினகர் உயர்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி, ஆர்.காவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகளிலும், மண்டபம் யூனியனில் ராமேசுவரம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, பனைக்குளம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும், திருப்புல்லாணி யூனியனில் பெரியபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழக்கரை மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன.
திருவாடானை யூனியன்இதேபோல திருவாடானை யூனியனில் திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொண்டி வில்கம் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும், ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.மங்கலம் ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகளிலும், போகலூர் யூனியனில் சத்திரக்குடி வாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசடிவண்டல் நாடார் மகாஜன சங்கம் வாசன் சேர்மத்தாய் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும், நயினார்கோயில் யூனியனில் காரடர்ந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, பொட்டகவயல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.
பரமக்குடி யூனியனில் பரமக்குடி டாக்டர் சுரேஷ் மெட்ரிக்பள்ளி, பரமக்குடி கைராத்துல் ஜமாலியா மேலமுஸ்லிம் உயர்நிலைப்பள்ளி, எமனேசுவரம் எஸ்.என்வி.அரசு மேல்நிலைப்பள்ளி, பார்த்திபனூர் கிரசண்ட் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும், முதுகுளத்தூர் யூனியனில் முதுகுளத்தூர் டி.இ.எல்.சி உயர்நிலைப்பள்ளி, அலங்கானூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும், கமுதி யூனியனில் கோட்டைமேடு அரசு மேல்நிலைப்பள்ளி, கமுதி கே.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும், கடலாடி யூனியனில் கடலாடி சங்கீதா மெட்ரிக் பள்ளி, சிக்கல் பானு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன.
விண்ணப்பதாரர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் லூயிஸ் லெவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பரமக்குடி டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மட்டுமே திரும்ப பெறப்படும்.
ஒரு நபருக்கு ஒன்றுவிண்ணப்பம் விற்பனை மையங்கள் தொடர்பான விபரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். விருப்பமுள்ள நபர்கள் தங்களது அருகில் உள்ள மையங்களை தொடர்புகொண்டு விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். தேர்வுத்தாள்–1, தேர்வுத்தாள்–2 ஆகிய 2 தேர்வுகளையும் எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் தனித்தனியான விண்ணப்பங்களில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வாங்கப்பட்ட மாவட்டங்களிலேயே திரும்ப அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு மாவட்டத்தில் விண்ணப்பம் பெற்று மற்றொரு மாவட்டத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அளிக்கலாம். தேர்வர்கள் எக்காரணம்கொண்டும் சென்னை, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேரடியாக அனுப்புதல் கூடாது. இந்த தகவலை கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.