செமஸ்டர் தேர்வில் தோல்வி: கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-03-01 21:59 GMT

புனே,

செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

புனே, சிங்கட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தவர் ஆகாஷ்(வயது 18). சத்தாராவை சேர்ந்த இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று முன்தினம் ஆகாஷ் மற்றும் அவரது அறை மாணவர்கள் சாப்பிட்டு விட்டு தூங்கச்சென்றனர். இந்தநிலையில் அதிகாலை 5 மணியளவில் சத்தம்கேட்டு அறை மாணவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். அப்போது ஆகாஷ் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மாணவர்கள் விடுதி பாதுகாவலருடன் சேர்ந்து ஆகாசை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆகாசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தேர்வில் தோல்வி

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் ஆகாசின் அறையில் சோதனை போட்டனர். அப்போது அவரது புத்தகத்தில் இருந்து கடிதம் ஒன்று சிக்கியது.

அதில், ‘பெற்றோர் என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர். ஆனால் முதல் செமஸ்டர் தேர்வில் 3 பாடத்தில் தோல்வி அடைந்துவிட்டேன். இதனால் கல்லூரி படிப்பை முடிக்க முடியுமா? என்ற பயம் ஏற்பட்டது. எனவே தற்கொலை செய்துகொள்ள துணிந்தேன். பெற்றோர் என்னை மன்னித்துவிடுங்கள்’ என எழுதப்பட்டு இருந்தது.

இந்த சம்பவம் குறித்து சிங்கட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்