பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்து வழக்கு ஆவணங்களை இணையதளம் மூலம் பெறலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்து வழக்குகள் தொடர்பான ஆவணங்களை இணையதளம் மூலம் பெறலாம் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.

Update: 2017-03-01 23:00 GMT
பெரம்பலூர்,

சாலை விபத்து வழக்கு தொடர்பாக நீதிமன்றம், காப்பீடு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் இழப்பீட்டு தொகை கேட்டு விண்ணப்பித்தவர்கள், விபத்து வழக்கு ஆவணங்களை எளிதில் பெறும் நோக்கில் அவற்றை போலீஸ் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா அறிவுறுத்தலின் பேரில் சாலை விபத்து வழக்குகள் தொடர்பான ஆவணங்களை www.tnp-o-l-i-ce.gov.in என்கிற போலீஸ் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று தொடங்கியது.

மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞான சிவக்குமார் ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சிக்கு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திக், ஜவகர்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

போலீஸ் இணையதளம் வாயிலாக...

விபத்து வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்), வாகனத்தின் ஆர்.சி. புத்தகம், ஓட்டுனர் உரிமம், காப்பீடு சான்றிதழ், விபத்தில் இறந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கை, காயம் அடைந்தவர்களின் விவரம் உள்பட 12 வகையான ஆவணங்கள் போலீஸ் இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது. விபத்து இழப்பீடு கேட்டு விண்ணப்பிப்பவர்கள் அதுதொடர்பான ஆவணங்களை பெற போலீஸ் நிலையத்திற்கு வராமலேயே குற்றப்பதிவேடு எண்ணை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த இணையதள சேவையானது விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு காப்பீடு, இழப்பீடு தொகை விரைவில் கிடைக்க வழிவகை செய்யும். மேலும் விபத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது குறித்த தகவலும் மனுதாரரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுவதால் பயனுள்ளதாக இருக்கும் என நம்பு கிறேன். மார்ச் 1-ந்தேதிக்கு (நேற்று) பிறகு பதிவு செய்யப்படும் விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீஸ் இணையதளம் மூலம் பொதுமக்கள் பெற்று பயனடையலாம் என்றார். 

மேலும் செய்திகள்