திருச்சி மாவட்டத்தில் வாகன விபத்து ஆவணங்களை கணினியில் பதிவேற்றும் பணி

திருச்சி மாவட்டத்தில் வாகன விபத்து ஆவணங்களை கணினியில் பதிவேற்றும் பணியினை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

Update: 2017-03-01 22:45 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும் வகையில் வாகன விபத்து வழக்குகள் சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் வலைபின்னல் முறை (சிசிடிஎன்எஸ்) திட்டத்தில் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நேற்று திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

12 வகையான ஆவணங்கள்

வாகன விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும் வகையில், வழக்குகள் சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் சிசிடிஎன்எஸ் திட்டத்தின் சிப்ரஸ் மென்பொருள் மூலம் மனு ரசீது, முதல் தகவல் அறிக்கை, சம்பந்தப்பட்ட இடத்தின் வரைபடம், வாகனத்தின் பதிவு எண், ஓட்டுனர் உரிமம், வாகன இன்சூரன்ஸ், பாதிக்கப்பட்டவரின் சிகிச்சை சான்றிதழ் உள்பட 12 வகையான ஆவணங் களையும் கணினியில் பதிவேற்றம் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் சிறு விபத்து வழக்குகள் 200-ம், விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட வழக்குகள் 80-ம் நேற்று முதல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட வழக்குகள் பற்றிய விவரத்தை வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் இணையதளம் மூலம் அதற்கான கட்டணத்தை கட்டி பெற்று கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்யலாம்

வாதி, பிரதிவாதிக்கு ஒரு ஆவணத்தை ரூ.10 செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணம் கம்பெனிகள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.100 செலுத்த வேண்டும். நிறுவனங்கள் செல்போன் ரீசார்ஜ் செய்து கொள்வது போல் கட்டண தொகையை மொத்தமாக கட்டி அந்த கட்டணம் தீரும்வரை தங்களுக்கு தேவையான ஆவணங்களை பெற்று கொள்ளலாம். கட்டணம் தீர்ந்துவிட்டால் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும். வாதி மற்றும் பிரதிவாதி பதிவிறக்கம் செய்ய கட்டணம் பெறும் முறை குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் திருச்சி மாநகரத்திலும் வாகன விபத்து ஆவணங்களை கணினியில் நேற்று முதல் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். இதே திட்டம் மூலம் கடந்த 2013-ம் ஆண்டு முதலே தமிழகம் முழுவதும் குற்றம் மற்றும் குற்ற வாளிகளை கண்டறிவதற்காக வழக்குகளின் விவரங்கள் மற்றும் முதல் தகவல் அறிக்கை ஆகியவை கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்