பினராயி விஜயன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் போது கர்நாடக அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கிய 2 பேர் பிடிபட்டனர்

கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின் போது கர்நாடக அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Update: 2017-03-01 19:59 GMT

மங்களூரு,

கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின் போது கர்நாடக அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கர்நாடக அரசு பஸ்கள் மீது...

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் கடந்த மாதம்(பிப்ரவரி) 25–ந் தேதி கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார். ஆனால் அவர் வருகைக்கு எதிர்ப்பு அன்றைய தினம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் இந்து அமைப்பினர் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.

இந்த நிலையில் மங்களூரு அருகே விட்டலா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அட்டியங்தடுக்கா பகுதியில் சென்று கொண்டு இருந்த 2 கர்நாடக அரசு பஸ்கள் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக பஸ்சின் டிரைவர்கள் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த விட்டலா போலீசார் மர்மநபர்களை தேடிவந்தனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் கர்நாடக அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் விட்டலா பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கேபு கிராமத்தை சேர்ந்த தயானந்த்(வயது 22), மஞ்சேஸ்வர் பகுதியை சேர்ந்த மஞ்சுநாத்(25) என்பதும், அவர்கள் முழுஅடைப்பு போராட்டம் நடந்த போது கர்நாடக அரசு பஸ்கள் இயங்கியதால், ஆத்திரத்தில் பஸ்கள் மீது கல்வீசி தாக்கியதும் தெரிந்தது. இதையடுத்து அவர்களை விட்டலா போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்