நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை பெயர்ப்பலகையில் ‘ஸ்டிக்கர்’ ஒட்ட முயன்ற பா.ம.க.வினர் கைது

அந்தியூர் மற்றும் பெருந்துறையில் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை பெயர்ப்பலகையில் ‘ஸ்டிக்கர்’ ஒட்ட முயன்ற பா.ம.க.வினர் 122 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-03-01 22:00 GMT
‘ஸ்டிக்கர்‘ ஒட்டும் போராட்டம்

நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள எந்த டாஸ்மாக் கடைகளும் அகற்றப்படவில்லை.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளின் பெயர்ப்பலகையில் ‘சட்ட விரோத மதுக்கடை’ என்ற ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார்.

அந்தியூர்

அதன்படி நேற்று ஈரோடு மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடையின் பெயர்ப்பலகையில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் போராட்டம் நடந்தது.

அந்தியூர் பஸ் நிலையம் அருகே பவானி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையின் பெயர்ப்பலகையில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.சி.ஆர்.கோபால் முன்னிலை வகித்தார். மாநில சட்ட பாதுகாப்பு குழு துணை பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அமைப்பு செயலாளர் செங்கோட்டையன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு போராட்டம் குறித்து விளக்கி பேசினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் டாஸ்மாக் கடையின் பெயர்ப்பலகையில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக பஸ் நிலையம் அருகே கூடி நின்ற 102 பா.ம.க.வினரும் முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் போலீசார் பா.ம.க.வினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பெருந்துறை

பெருந்துறையில் புதிய பஸ் நிலையம் அருகே நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் பெயர்ப்பலகையில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமையில் பா.ம.க.வினர் 20 பேர் கோ‌ஷமிட்டபடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். ஆனால் பெருந்துறை போலீசார் பா.ம.க.வினரை இடையிலேயே தடுத்து நிறுத்தி 20 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 20 பேரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

அந்தியூர், பெருந்துறையில் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடை பெயர்ப்பலகையில் ‘ஸ்டிக்கர்‘ ஒட்ட முயன்றதாக மொத்தம் 122 பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்