பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த போலீஸ்காரர் கைது
பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த போலீஸ்காரர் கைது ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு
கூடலூர்,
பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து, பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தில் நேற்று உண்ணாவிரதம் இருந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்தார்.
பணியிடை நீக்கம்தேனி மாவட்டம் ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்தவர் வேல்முருகன். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட போது, சென்னை டி.ஜி.பி. அலுவலகம் முன்பு வேல்முருகன் தீக்குளிக்க முயன்றார். பின்னர் ஜெயலலிதா விடுதலை ஆனதால் தேனியில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்.
அதை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக, சென்னையில் ஜெயலலிதா சமாதி முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக கூறினார். இதனால் தேனி ஆயுதப்படை பிரிவுக்கு வேல்முருகன் இடம் மாற்றப்பட்டார். பின்னர் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
உண்ணாவிரதம்இந்நிலையில் கூடலூரை அடுத்த லோயர்கேம்பில் உள்ள பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்துக்கு வேல்முருகன் நேற்று வந்தார். போலீஸ் சீருடையில் இருந்த அவர் பென்னிகுவிக் சிலை முன்பு அமர்ந்து திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில், மக்களுக்கு எதிராக நான் செயல்படவில்லை. சசிகலாவுக்கு எதிராக தான் குரல் கொடுத்தேன். இதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டேன். இதை கண்டித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளேன். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலில் சசிகலாவுக்கு ஆதரவாக நிற்கும் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுவேன் என்றார்.
கைதுஇதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உத்தமபாளையம் போலீசார் அங்கு வந்து வேல்முருகனை கைது செய்தனர்.