நெல்லையில் விபத்து வழக்கில் அனைத்து ஆவணங்களையும் பதிவு செய்ய தனி மையம் போலீஸ் கமி‌ஷனர் திருஞானம் தொடங்கி வைத்தார்

விபத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பதிவு செய்ய நெல்லை மாநகர போலீஸ் துறை சார்பில் டவுன் போலீஸ் நிலையத்தில் தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2017-03-01 21:30 GMT

நெல்லை,

விபத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பதிவு செய்ய நெல்லை மாநகர போலீஸ் துறை சார்பில் டவுன் போலீஸ் நிலையத்தில் தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் திருஞானம், நேற்று இந்த மையத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது போலீஸ் கமி‌ஷனர் திருஞானம் கூறுகையில், ‘‘விபத்து வழக்குகளில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தனி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் போலீஸ் நிலையம், கோர்ட்டு, காப்பீட்டு நிறுவனம் ஆகிய 3 பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் விபத்துகளில் பாதிக்கப்பட்டோர் எளிதாக நிவாரணம் பெற முடியும். தற்போது இந்த பதிவு தொடங்கி உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 1–ந்தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நெல்லை மாநகரில் குற்ற வழக்குகள் குறைந்து வருகின்றன. குற்றவாளிகளை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 12 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிளஸ்–2 தேர்வு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வின் போது தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. இந்த தேர்வுகளின் இறுதி நாளில் தேர்வு மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பள்ளிக்கூடங்களில் சாதி பிரச்சினைகள் தலைதூக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைதி கொலை

கைதி சிங்காரம் கொலை வழக்கில் இதுவரை 5 பேரை கைது செய்து உள்ளோம். சுபாஷ் பண்ணையார் உள்பட சிலரை விரைவில் கைது செய்வோம்.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் பிரதீப்குமார், கூடுதல் துணை கமி‌ஷனர் இளங்கோ, உதவி கமி‌ஷனர்கள் மாரிமுத்து, விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்