இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை “அடியோடு மூடவில்லை என்றால் அடித்து நொறுக்குவோம்” வைகோ ஆவேச பேச்சு

ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை அடியோடு மூடவில்லை என்றால் அடித்து நொறுக்குவோம் என்று நெடுவாசலில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வைகோ ஆவேசமாக பேசினார்.

Update: 2017-02-28 23:00 GMT
வடகாடு,

ஆர்ப்பாட்டம்

நெடுவாசல் பஸ் நிறுத்தம் அருகில், ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அடித்து நொறுக்குவோம்

52 வருடகாலமாக அரசியலில் இருந்து வருகிறேன். பல போராட்ட களங்களை சந்தித்து விட்டேன். எந்த ஒரு போராட்டத்தையும் அறிவித்து விட்டு நான் சென்று விடுவது கிடையாது. போராட்ட களத்தில் சம்மட்டி தூக்கும் முதல் கரம் வைகோவின் கரமாக தான் இருக்கும். மீத்தேன், ஈத்தேன், ஷேல்கேஸ் உள்ளிட்ட பல ரசாயன கலவையின் தொகுப்பாக ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான காண்டிராக்டை கர்நாடக மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியில் இரண்டு முறை எம்.பி.யாக இருந்த மல்லிகார்ஜுன சித்தராமையாவின் ஜெட் லேபரேட்டரி என்ற நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கி இருக்கிறது.

காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு கிரேட் ஈஸ்டன் எனர்ஜி என்ற கம்பெனிக்கு தி.மு.க. ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டபோது அந்த கம்பெனியின் அலுவலகத்தை அடித்து நொறுக்குவோம் என்று அறிவித்தோம். இரவோடு இரவாக அலுவலகத்தை மூடிவிட்டு ஓடிவிட்டார்கள். அதைப்போலத்தான் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் அடியோடு மூடிவிட்டு ஓட வேண்டும். இல்லை என்றால் அதனை அடித்து நொறுக்குவோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம். நான் இப்படி பேசுவதால் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்கள் நான் மாணவர்களையும், இளைஞர்களையும் தூண்டிவிடுவதாக பேசலாம். அவர்களது உளறல்களுக்கு நான் பயப்பட மாட்டேன்.

அனுமதிக்க மாட்டோம்

இந்த போராட்டத்துக்கு கட்சி, மதம், சாதி என்ற பாகுபாடு இன்றி இளைஞர்களும், மாணவர்களும் திரண்டு வந்து இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த அளவிற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. மாணவர்கள் இறுதி பரீட்சை முடிந்த பின்னர் ஊழலுக்கு எதிராகவும் இதே போல் திரண்டு வந்து போராட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒழித்தே தீருவேன். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் எந்த இடத்திலும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து அழிக்காதே அழிக்காதே நஞ்சை பூமியை அழிக்காதே, ஹைட்ரோ கார்பன் திட்டம் நாசகார திட்டம், மத்திய அரசே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய் என்பது போன்ற கோஷங்களை வைகோ எழுப்பினார். அதனை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் திரும்ப கூறி கோஷமிட்டனர்.

பேட்டி

இதனை தொடர்ந்து வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘மத்திய மந்திரி ஒருவர் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் சில தியாகங்களை செய்து தான் ஆக வேண்டும் என கூறி இருக்கிறார். அந்த தியாகத்தை குஜராத்திலோ அல்லது அவரது சொந்த மாநிலத்திலோ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நைஜீரியா நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டதால் அந்த நாடே பாலைவனமாக மாறிவிட்டது. அதைப்போல் தான் தமிழகத்தையும் பாலைவனமாக்கிவிட்டு இங்குள்ள விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை எல்லாம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு வாங்கி கொடுத்து விடலாம் என திட்டமிடுகிறார்கள். இந்த சதி திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்க முடியாது. தமிழக முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என பகிரங்கமாக அறிவிப்பு வெளியிட வேண்டும்’ என்றார்.

அதன் பின்னர் வைகோ நல்லாண்டார் கொல்லை என்ற கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்காக அமைக்கப்பட்டு இருந்த ஆழ்துளை கிணற்றை பார்வையிட்டார். 

மேலும் செய்திகள்