காரில் மோதியதில் தகராறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் கிராம மக்கள் சாலை மறியல் – பரபரப்பு

சிக்கமகளூரு அருகே தன்னுடைய கார் மீது போலீஸ் இன்ஸ்பெக்டரின் கார் மோதியதால் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நபரும், அப்பகுதியைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கினர்.

Update: 2017-02-28 21:00 GMT

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு அருகே தன்னுடைய கார் மீது போலீஸ் இன்ஸ்பெக்டரின் கார் மோதியதால் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நபரும், அப்பகுதியைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கினர். அப்போது இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

போலீஸ் இன்ஸ்பெக்டர்

சிக்கமகளூரு புறநகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கவிராஜ். இவர் நேற்று காலை தனது காரில் தன்னுடன் பணியாற்றி வரும் போலீஸ்காரர் ஒருவருடன் சொந்த வேலை காரணமாக பக்கத்து கிராமத்திற்கு காரில் சென்று இருந்தார். அங்கு வேலை முடிந்ததுடன் அவர்கள் காரில் சிக்கமகளூரு நோக்கி வந்து கொண்டு இருந்தனர். காரை கவிராஜ் ஓட்டி வந்தார்.

கார் சிக்கமகளூரு அருகே முத்திஹள்ளி பகுதியில் வந்தபோது நட்ராஜ் என்பவர் ஓட்டி சென்ற காரின் பின்பகுதியில், கவிராஜின் கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் நட்ராஜுக்கும், இன்ஸ்பெக்டர் கவிராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தாக்குதல்

இந்த சந்தர்ப்பத்தில் நட்ராஜ், கவிராஜ் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று தெரியாமல் அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கிராம மக்கள் சிலரும் நட்ராஜுக்கு ஆதரவாக அங்கு திரண்டனர். பின்னர் அவர்களுடன் நட்ராஜுடன் சேர்ந்து இன்ஸ்பெக்டர் கவிராஜை தாக்கியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கவிராஜ், தான் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்றும், தெரியாமல் கார் மீது மோதிவிட்டேன் என்றும் கூறினார். ஆனால் அதை கேட்காத கிராம மக்கள் தொடர்ந்து கவிராஜை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கவிராஜ் தன்னுடைய காரில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நான் போலீஸ் இன்ஸ்பெக்டர், என்னையே அடிக்கிறீர்களா? என்று கூறி, கிராம மக்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் கையில் துப்பாக்கி வைத்திருந்ததை அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் படம் பிடித்தனர்.

வாக்குவாதம்

இதற்கிடையே அங்கிருந்த சிலர் துப்பாக்கியை கையில் வைத்து கொண்டு எங்களை மிரட்டுகிறீர்களா? என்று கேட்டு இன்ஸ்பெக்டர் கவிராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் அவருக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பி அதேப்பகுதியில் சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் தன்னை தாக்கியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிராஜ் சிக்கமகளூரு புறநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

7 பேர் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நட்ராஜ் உள்பட 7 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிராஜ் யாரையும் சுட வேண்டும் என்ற நோக்கத்தில் துப்பாக்கியை கையில் எடுக்கவில்லை. அவரை நட்ராஜும், அந்தப்பகுதியை சேர்ந்த சிலரும் தாக்கியதால் தன்னை காப்பாற்றி கொள்ள அவர் துப்பாக்கியை கையில் எடுத்தார். தற்போது முத்திஹள்ளி பகுதியில் எந்த பிரச்சினையும் இல்லை. இருந்தாலும் அந்தப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது என்றார்.

இந்த சம்பவத்தால் நேற்று முத்திஹள்ளி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்