மும்பை மாநகராட்சி தேர்தலில் ‘நான் எனக்கு தான் வாக்களித்தேன், ஆனாலும் ஜீரோ வாக்கு பெற்றேன்’ தேர்தல் கமி‌ஷனிடம் சுயேச்சை வேட்பாளர் பரபரப்பு புகார்

‘‘மும்பை மாநகராட்சி தேர்தலில் நான் எனக்கு தான் வாக்களித்தேன். ஆனாலும், ஜீரோ வாக்கு பெற்றேன்’’ என்று கூறி தேர்தல் கமி‌ஷனிடம் சுயேச்சை வேட்பாளர் பரபரப்பு புகார் அளித்தார்.

Update: 2017-02-28 23:35 GMT

மும்பை,

‘‘மும்பை மாநகராட்சி தேர்தலில் நான் எனக்கு தான் வாக்களித்தேன். ஆனாலும், ஜீரோ வாக்கு பெற்றேன்’’ என்று கூறி தேர்தல் கமி‌ஷனிடம் சுயேச்சை வேட்பாளர் பரபரப்பு புகார் அளித்தார்.

சுயேச்சை வேட்பாளர்

மராட்டியத்தில் மாநகராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு கடந்த 21–ந் தேதி இறுதிகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், மும்பை சாக்கி நாக்கா 164–வது வார்டில் ஸ்ரீகாந்த் சிர்ஷாத் என்ற சுயேச்சை வேட்பாளர் போட்டியிட்டார்.

இவருக்கு தேர்தல் முடிவில் வாக்குகள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால், ஏமாற்றம் அடைந்த அவர், தேர்தல் கமி‌ஷனிடம் நேற்று பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அதில், ‘‘நானும், எனது குடும்பத்தினரும் எனக்கு தான் மாநகராட்சி தேர்தலில் வாக்களித்தோம். ஆனாலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எனக்கு ஜீரோ வாக்கு பதிவாகி இருக்கிறது. இது சந்தேகத்துக்குரியது. இதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

கோர்ட்டை அணுக முடிவு

மேலும், தான் போட்டியிட்ட அதே வார்டில், தன்னை போல் தோல்வியை தழுவிய பிற வேட்பாளர்கள் கோர்ட்டை அணுக முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதன்பேரில், தேர்தல் கமி‌ஷன் இந்த புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, நாசிக் மாநகராட்சியிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சூட்சமங்கள் நிகழ்ந்திருப்பதாக தோல்வி அடைந்த வேட்பாளர்கள் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்