பெங்களூருவில் மனைவி-மகளை கொன்று என்ஜினீயர் தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை

பெங்களூருவில், மனைவி-மகளை கொன்று என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-02-28 23:35 GMT
பெங்களூரு,

பெங்களூருவில், மனைவி-மகளை கொன்று என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தகராறு

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் அமீத்குமார் ஷா (வயது 35). இவருடைய மனைவி மீனாட்சி ஷா(30). இந்த தம்பதியின் மகள் மான்யா (2). அமீத்குமார் ஷா தனது குடும்பத்துடன் பெங்களூரு எலகங்கா அருகே உள்ள சோமேஷ்வரா நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். கடந்த ஓராண்டாக அமீத்குமார் ஷா பணிக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதனால் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மீனாட்சி ஷா, நர்சரி பள்ளி ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார்.

மேலும், மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான அமீத்குமார் ஷா அடிக்கடி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோல், கடந்த 26-ந் தேதி இரவும் அமீத்குமார் ஷா குடிபோதையில் வீடு திரும்பியுள்ளதாக தெரிகிறது. அப்போது, கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மீனாட்சி ஷா பள்ளிக்கும் செல்லவில்லை. அவருடைய செல்போனுக்கு பள்ளி ஆசிரியைகள் போன் செய்தும் அவர் எடுக்கவில்லை.

மனைவி-மகளை கொன்று தற்கொலை


இதனால் சந்தேகம் அடைந்த பள்ளி ஆசிரியைகள் ஊழியர் ஒருவரை மீனாட்சி ஷாவின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவர் வீட்டு அழைப்பு மணியை அடித்தார். அப்போதும் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் அவர் அருகே வசித்து வரும் மீனாட்சி ஷாவின் வீட்டு உரிமையாளரிடம் சம்பவம் குறித்து கூறினார். இதையடுத்து, அவர்கள் வீட்டு ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்தனர். அப்போது, அமீத்குமார் ஷா தூக்கில் பிணமாக தொங்கியதும், மற்ற 2 பேரும் வீட்டுக்குள் இறந்து கிடந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து அறிந்தவுடன் எலகங்கா நியூ டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் இறந்து கிடந்தவர்களின் உடல்களை பார்வையிட்டனர். அப்போது, மீனாட்சி ஷாவை கத்தியால் குத்தியும், மான்யாவுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தும் அமீத்குமார் ஷா கொன்றதும், பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இருப்பினும், அவர் எதற்காக மனைவி-மகளை கொன்று தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை.

பிரேத பரிசோதனை

இறந்துபோன 3 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் எலகங்கா நியூ டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் அமீத்குமார் ஷா தனது மனைவி, மகளை கொன்று தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்