இஸ்ரோ மூலம் பெறப்படும் வானிலை ஆராய்ச்சி தகவல்களை நாசாவுடன் பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம்

இஸ்ரோ மூலம் பெறப்படும் வானிலை ஆராய்ச்சி தகவல்களை அமெரிக்காவின் நாசாவுடன் பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக நாசா விஞ்சானி ஜூடித் கார்பென் தெரிவித்தார்.

Update: 2017-02-28 23:15 GMT
அறிவியல் கண்காட்சி

ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் வானிலை ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு விஞ்ஞானி சர்.சி.வி. ராமன் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன்படி நேற்று நடைபெற்ற அறிவியல் கண்காட்சியினை நாசா விஞ்ஞானி ஜூடித் கார்பென் தொடங்கி வைத்து கூறியதாவது:–

உலக நாடுகள் முழுவதும் வானிலை ஆராய்ச்சிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவின் இஸ்ரோ அமைப்புடன் நாசா ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. இந்தியாவில் உள்ள வானிலை ஆராய்ச்சி உபகரணங்கள் மற்றும் தகவல்களை நாசாவுடன் பகிர்ந்து கொள்ள இந்த ஒப்பந்தம் உதவும். இதற்காக நான் இந்தியா வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் மனோகரன், இந்த மையத்தின் செயல்பாடுகள் குறித்து நாசா விஞ்ஞானி ஜூடித் கார்பென்னுக்கு விளக்கி கூறினார்.

பரிசுகள்

அறிவியல் கண்காட்சியை முன்னிட்டு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நாசா விஞ்ஞானி ஜூடித் கார்பென் பரிசு வழங்கினார்.

இந்த அறிவியல் கண்காட்சியில் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம், குன்னூர் வெறிநாய்க்கடி ஆராய்ச்சி மையம், பழங்குடியினர் ஆராய்ச்சி மையம், மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையம், ஆடு இனவிருத்தி மையம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் அவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

வியந்த மாணவிகள்

இதுதவிர பல்வேறு பள்ளிகள் சார்பில் மாணவ–மாணவிகள் தங்களது கண்டுபிடிப்புகளையும் கண்காட்சியில் வைத்திருந்தனர். மேலும் வானிலை ஆராய்ச்சி மையம் எவ்வாறு செயல்படுகிறது. விண்வெளியில் இருந்து வரும் ஒலிகள் எவ்வாறு சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது என்பது குறித்து மைய ஊழியர்கள் விரிவாக மாணவ–மாணவிகளுக்கு எடுத்து கூறினர்.

இதுதவிர விண்வெளியில் உள்ள கோள்கள் சூரியனை மையமாக கொண்டு இயங்கும் விதம் ஆகியவை குறித்த காட்சி படங்களும் வைக்கப்பட்டு இருந்தன. இதனை இங்கு வந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் வியப்புடன் பார்வையிட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்