மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்; ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக ரூ.200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

Update: 2017-02-28 23:15 GMT
வேலை நிறுத்தம்

வங்கித்துறையில் மத்திய அரசின் சீர்திருத்தங்களை கைவிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும். நிரந்தர வேலை வாய்ப்புகளை அயலக சேவைக்கு விடுவதை அனுமதிக்க கூடாது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தில் கூடுதல் நேரம் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

வங்கி ஊழியர்களுக்கான அடுத்தகட்ட சம்பள விகிதத்தை புதுப்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்திலும் நேற்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என மொத்தம் 42 வகையான வங்கிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வங்கி நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன.

ரூ.200 கோடி வர்த்தகம்

திண்டுக்கல் நகர் பகுதியில் சில வங்கிகளை தவிர பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. சாலைரோடு, திருச்சி ரோடு, பழனிரோடு பகுதிகளில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதே போல மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் வங்கிகள் திறக்கப்படவில்லை.

இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வங்கி சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, காசோலை பரிமாற்றம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதைத்தவிர மொத்தமாக பணத்தை டெபாசிட் செய்ய முடியாமலும், கடன் தவணைகளை செலுத்த முடியாமலும் வாடிக்கையாளர்கள் திண்டாடினர்.

இது குறித்து ஸ்டேட் வங்கி அலுவலர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மண்டல செயலாளர் செல்வராஜ் கூறும்போது, ‘பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் 39 வகையான வங்கிகள் பங்கேற்றன. இதன் எதிரொலியாக சுமார் 200 கோடி ரூபாய் வங்கி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. எங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை அடுத்தடுத்து போராட முடிவு செய்து இருக்கிறோம்’ என்றார்.

மேலும் செய்திகள்