ஈரோடு மாவட்டத்தில் வங்கிகளில் பணியாளர்கள் வேலை நிறுத்தம் வர்த்தகம் பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் 310 வங்கிகளில் 1,800 பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது கூடுதல் நேரப்பணியில் ஈடுபட்ட வங்கி ஊழியர், அதிகாரிகளுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. அதன்படி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என சுமார் 310 வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. இந்த போராட்டத்தில் சுமார் 400 பெண்கள் உள்பட 1,800 பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
ரூ.400 கோடிவங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தினால் ஈரோடு மாவட்டத்தில் பணப்பரிவர்த்தனை மற்றும் காசோலை பரிவர்த்தனை என சுமார் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ஒருசில தனியார் வங்கிகளை தவிர மற்ற வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் வங்கிகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வங்கி பணியாளர்கள் ஈரோடு தலைமை ஸ்டேட் வங்கி வளாகத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணேஷ் தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் எம்.ஜோ சுகுமார், ஆர்.நரசிம்மன், வி.பாக்கியகுமார், கே.செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வங்கிப்பணிகள் முடக்கம்இதுகுறித்து கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணேஷ் கூறியதாவது:–
தொழிலாளர் நல சீர்திருத்தங்கள் என்ற பெயரில் நிறுவனங்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் சாதகமான முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மேலும், வங்கியில் காவலர்கள் பணி முதல் ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பும் பணி வரை தனியார் மயமாக்கப்பட்டு உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் தனியார் மயமாக்குதலை தடுக்க வேண்டும்.
உயர் பணமதிப்பீடு நீக்க நடவடிக்கையால் கடந்த நவம்பர், டிசம்பர் ஆகிய 2 மாதங்கள் வங்கி பணியாளர்கள் நீண்ட நேரம் பணியாற்றினார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை எடுக்காமல் வேலை செய்தனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
வாராக்கடன்பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றி அமைத்தல், புதிய நோட்டுகளை வினியோகம் செய்வதினால் வங்கிகளில் வரைவோலைகள் செயல்பாடு, கடன் வழங்குதல் என வங்கிப்பணிகள் முழுமையாக முடங்கியது. இதனால் வங்கிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும்.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் மூலம் ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. வாராக்கடன் வசூலிப்பதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.