மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

Update: 2017-02-23 23:30 GMT
திருப்பூர்,

சிறுமி பாலியல் பலாத்காரம்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ்வரன்(வயது 57). இவர் தறிப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய வீட்டருகே மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி ஒருவர் தனது தாய் மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மற்றும் சகோதரிகளை அவருடைய தாயார் கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி மனநலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட மாதேஷ்வரன் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து இதுபோல பல நாட்களாக அந்த சிறுமியை மாதேஷ்வரன் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

10 ஆண்டு சிறை

இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் தாயார் காங்கேயம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேஷ்வரனை கைது செய்தனர்.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட 2-வது கூடுதல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முகமது ஜியாவுதீன் முன்னிலையில் நேற்று விசாரணைக்காக வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட மாதேஷ்வரனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்டத்தவறும் பட்சத்தில் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்