ஹாவேரி அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் கம்பியை பிடித்து விவசாயி தற்கொலை கடன் தொல்லையால் விபரீத முடிவு
ஹாவேரி அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் கம்பியை பிடித்து விவசாயி தற்கொலை செய்தார். கடன் தொல்லையால் அவர், இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது.
பெங்களூரு,
ஹாவேரி அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் கம்பியை பிடித்து விவசாயி தற்கொலை செய்தார். கடன் தொல்லையால் அவர், இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது.
டிரான்ஸ்பார்மரில் ஏறிய விவசாயிஹாவேரி மாவட்டம் ஹனகல் அருகே சிருகூடா கிராமத்தை சேர்ந்தவர் சமந்த் ஷாப் (வயது 58). விவசாயி. இவருக்கு 3 ஏக்கரில் விவசாய தோட்டம் உள்ளது. விவசாயத்திற்காக சமந்த் ஷாப் ஏராளமானவர்களிடம் வட்டிக்கும், வங்கியிலும் கடன் வாங்கி இருந்தார். இந்த நிலையில், போதிய மழை இல்லாத காரணத்தாலும், வறட்சி காரணமாகவும் சமந்த் ஷாப் தனது விவசாய தோட்டத்தில் பயிரிட்டு இருந்த பயிர்கள் நாசம் அடைந்தன.
இதனால் விவசாயத்திற்காக பல்வேறு நபர்களிடமும், வங்கியில் வாங்கிய கடன்களையும் திரும்ப கொடுக்க முடியாமல் சமந்த் ஷாப் பரிதவித்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலையில் சிருகூடா கிராமம் அருகே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் சமந்த் ஷாப் ஏறினார்.
தற்கொலைபின்னர் அங்கிருந்த மின்சார கம்பியை அவர் தனது கையால் பிடித்ததாக தெரிகிறது. இதனால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக செத்தார். அவரது உடல் மின்சார டிரான்ஸ்பார்மரில் தொங்கியபடி கிடந்தது. இதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதுபற்றி அறிந்ததும் ஹனகல் போலீசார் விரைந்து வந்து சமந்த் ஷாப் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது விவசாயத்திற்காக சமந்த் ஷாப் ரூ.4 லட்சம் வரை கடன் வாங்கி இருந்ததாகவும், வறட்சி காரணமாக பயிர் கருகியதால் கடன் தொல்லையில் சிக்கிய சமந்த் ஷாப், மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஹனகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.