ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பொன்னேரியில் பேரணியாக சென்ற 3 ஆயிரம் பேர் கைது

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பொன்னேரியில் பேரணியாக சென்ற 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-02-17 21:30 GMT
பொன்னேரி,

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பொன்னேரியில் பேரணியாக சென்ற 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். கும்மிடிப்பூண்டியில் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது

தமிழக முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் வரவேண்டும். சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்க வேண்டும். தொகுதிக்கு வந்து பணியாற்ற வேண்டும் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்த குடும்பத்திற்கு ஆதரவு தெரிவிக்க கூடாது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமான குடும்பத்திற்கு அடிமையாக கூடாது என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடி பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் பொன்னேரி பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் பரிமேலழகன், முன்னாள் எம்.எல்.ஏ.சேகர், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் மோகனவடிவேல், சோழவரம் ஒன்றிய முன்னாள் செயலாளர் பிரகாஷ், பொன்னேரி நகர அவைத்தலைவர் மோகனசுந்தரம், மீஞ்சூர் நகர செயலாளர் பட்டாபிராமன், அனுப்பம்பட்டு ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் சார்லஸ், உட்பட 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பேரணியாக புறப்பட்டனர். அவர்களை பொன்னேரி போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நேற்று மாலை அ.தி.மு.க.வினர் கும்மிடிப்பூண்டி பஜாரில் அமைதி பேரணி நடத்தினர். பேரணிக்கு முன்னாள் மாவட்ட குழுத்தலைவரும், எல்லாபுரம் ஒன்றிய செயலாளருமான ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் முத்துகுமரன், அவைத்தலைவர் புல்லட் கோவிந்தராசன், எத்திராசன், அம்மணி மகேந்திரன், மனோகரன், ஆரம்பாக்கம் கோபி, மகளிர் அணி நிர்வாகிகள் மஸ்தான் பீவி, லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தீபா பேரவையை சேர்ந்தவர்களும் இணைந்து பங்கேற்றனர்.

கும்மிடிப்பூண்டி பயணியர் மாளிகையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட 500 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இரவு 7 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி சார்பில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் கமாண்டோ பாஸ்கரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன், நிர்வாகிகள் லோகநாதன், சதீஷ்குமார், வசந்தகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 310 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

மேலும் செய்திகள்