மீஞ்சூரில் பூட்டிய வீட்டில் 55 பவுன் நகைகள் கொள்ளை

மீஞ்சூரில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் 55 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2017-02-17 19:48 GMT
மீஞ்சூர்,

மீஞ்சூரில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் 55 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகைகள் கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் காந்தி சாலையில் வசிப்பவர் ஜெயச்சந்திரன் (வயது 61). இவர் தேரடித்தெருவில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கோமளவல்லி. நேற்று காலை கோமளவல்லி திருவள்ளூரில் வசிக்கும் மகள் வீட்டிற்கு சென்றார். ஜெயச்சந்திரன் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு ஐஸ்கிரீம் கடைக்கு சென்றார்.

பின்னர் அவர் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு திறந்து கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 55 பவுன் தங்க நகைகள் பூஜை செய்யும் வெள்ளிப்பொருட்கள் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

போலீசார் வலைவீச்சு

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர். 

மேலும் செய்திகள்