தூத்துக்குடிதென்பாகம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிஇடைநீக்கம் டி.ஐ.ஜி. ஆனந்தகுமார் சோமானி உத்தரவு

தூத்துக்குடி தென்பாகம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாருக்கும், டி.ஐ.ஜி. ஆனந்தகுமார் சோமானி பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2017-02-17 19:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி தென்பாகம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாருக்கும், டி.ஐ.ஜி. ஆனந்தகுமார் சோமானி பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

போலீசார் மீது புகார்

தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வக்கீல் ரகுராம் என்பவர் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில், பார் கவுன்சில் உறுப்பினரான, தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் மைக்கேல் ஸ்டானிஷ் பிரபு உள்ளிட்ட சிலர் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை, மைக்கேல் ஸ்டானிஷ் பிரபு உள்ளிட்டோரை போலீசார் கைது செய்யவில்லை.

குற்றவாளியுடன் தொடர்பு?

இந்த நிலையில், தென்பாகம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சில போலீசார் மைக்கேல் ஸ்டானிஷ் பிரபுவுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் ஆழ்வார் திருநகரி போலீஸ் நிலையத்துக்கும், சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜார்ஜ் புளியம்பட்டிக்கும், ராமகிருஷ்ணன் எப்போதும் வென்றான் போலீஸ் நிலையத்துக்கும், ஏட்டு சிவசக்திவேல் குரும்பூருக்கும், தனிப்பிரிவு ஏட்டு மனோஷ் முத்தையாபுரத்துக்கும், பெண் காவலர் சகாயராணி திருச்செந்தூருக்கும் மாற்றப்பட்டனர். மேலும் சில போலீசார் மைக்கேல் ஸ்டானிஷ் பிரபுவுடன் தொடர்பில் இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.

இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

இந்த நிலையில் தூத்துக்குடி வடபாகத்தில் இருந்து தென்பாகம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாருக்கும், போலீசாரால் தேடப்பட்டு வரும் வக்கீல் மைக்கேல் ஸ்டானிஷ் பிரபுவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை நேற்று மதியம் நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) ஆனந்தகுமார் சோமானி பிறப்பித்தார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்