மருதாநதி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதால் விவசாயம் பாதிப்பு

பட்டிவீரன்பட்டி அருகே மருதாநதி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2017-02-16 22:45 GMT
பட்டிவீரன்பட்டி,

அனுமதியின்றி மணல்...

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மருதாநதி அணை உள்ளது. அந்த அணையை ஒட்டியுள்ள மருதாநதி ஆற்றின் கோம்பை பகுதிகளிலும், சாத்தாகோவில் செல்லும் வடக்கு வாய்க்கால் பகுதிகளிலும் உள்ள ஓடைகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு வருகிறது.

அப்பகுதியை சேர்ந்த சிலர் டிராக்டர்களில் மணல் அள்ளுகின்றனர். இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. குறிப்பாக தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஓடைகள் பள்ளமாகி காட்சி அளிக் கிறது.

இதுமட்டுமின்றி ஓடைகளில் மணல் அள்ளப்படுவதால் கிணற்று பாசனத்தை நம்பி பயிரிடப்பட்டுள்ள கத்தரி, தக்காளி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமல்லாமல் மண்வளமும் குறைந்து வருகிறது.

சுவரொட்டிகள்

அனுமதியின்றி மணல் அள்ளுவது குறித்து வருவாய்த்துறை, போலீசாருக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அதிகாரிகள் யாராவது வந்தால், முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதற்கு ஊரின் நுழைவு வாயிலில் மணல் அள்ளுவோர் தங்களது ஆட்களை நியமித்துள்ளனர். இதனால் இரவு, பகல் என மணல் அள்ளப்படுகிறது.

எனவே மணல் கொள்ளையை தடுத்து, தென்னை மற்றும் காய்கறி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தநிலையில் தென்னை விவசாயிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் மணல் கொள்ளையை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில், மணல் திருட்டில் ஈடுபடுபர்களின் டிராக்டர்களை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. விவசாயிகள் ஒட்டிய சுவரொட்டியால் பட்டிவீரன்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்