கரூர் ரெயில் நிலையத்தில் பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர் வந்ததால் பரபரப்பு

நிலம் கொடுத்த வழக்கில் இழப்பீடு வழங்காததால் கரூர் ரெயில் நிலையத்தில் பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-02-16 22:45 GMT
கரூர்,

இழப்பீடு கேட்டு வழக்கு

கரூரை அடுத்த மண்மங்கலம் தாலுகா ராமேஸ்வரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 46). குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 1995-ம் ஆண்டு கரூர்-சேலம் ரெயில்வே பாதையில், குகை வழிபாதை அமைக்க தங்களுக்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தை ரெயில்வே துறைக்கு கொடுத்துள்ளனர்.

நிலத்திற்கு கொடுக்க வேண்டிய இழப்பீட்டு தொகையை ரெயில்வே துறை பேசியபடி கொடுக்கவில்லை. இதுகுறித்து குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் பலமுறை ரெயில்வே நிர்வாகத்தினரிடம் முறையிட்டனர். ரெயில்வே நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு கரூர் மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மணி ரெயில்வே நிர்வாகம் பேசியபடி இழப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஜப்தி செய்ய...

ஆனால் ரெயில்வே நிர்வாகம் பேசியபடி இழப்பீட்டு தொகை வழங்காத காரணத்தால் மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி மணி கரூர் ரெயில் நிலையத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நேற்று நீதிமன்ற அமீனா சாக்ரடீஸ், ராமேஸ்வரப்பட்டி பகுதியை சேர்ந்த குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கரூர் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அங்கிருந்த ரெயில் நிலைய அதிகாரி மூர்த்தியிடம் பொருட்களை ஜப்தி செய்யப் போவதாக கோர்ட்டு நகலை காண்பித்தனர். அப்போது ரெயில் நிலைய அதிகாரி, ரெயில்வேதுறை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கரூர் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்