கோவில் திருவிழாவில் எருதுவிடும் நிகழ்ச்சி ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு

பாலக்கோடு புதூர் பொன் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி எருதுவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

Update: 2017-02-16 22:45 GMT
பாலக்கோடு,

கோவில் திருவிழா

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புதூர் பொன்மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் பொங்கல் வைத்து ஆடு, கோழிகள் பலியிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் ஏராளமான பொதுமக்கள் மாவிளக்கு எடுத்தும், அலகுகுத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று கோவில் வளாகத்தில் எருதுவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சித்திரப்பட்டி, திம்மம்பட்டி, வாழைத்தோட்டம், மணியக்காரன்கொட்டாய், பேளாரஅள்ளி, செம்மநத்தம், கடைமடை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட எருதுகள் கொண்டு வரப்பட்டன. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று எருதுகளின் கழுத்தில் கயிறு கட்டி கோவிலை சுற்றி விரட்டி சென்றனர். சில எருதுகள் கூட்டத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆபாச நடனம்

இதனிடையே கோவில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை இளைஞர்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன கலைஞர்கள் திடீரென ஆபாச நடனம் ஆடத்தொடங்கினர். இதனால் நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ஆபாச நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். கோவில் திருவிழாவில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்திய பாலக்கோட்டையை சேர்ந்த கோவிந்தராஜ், விக்னேஷ், ஆனந்தன், கணேஷ்பாபு, அன்பழகன், தவமணி, அருண்குமார், கிருஷ்ணன், செல்லரசு ஆகிய 9 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்