ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா? கும்பகோணத்தில் குளங்களை ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு செய்தார்

ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளதா? என்று கும்பகோணத்தில் உள்ள குளங்களை ஓய்வு பெற்ற நீதிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2017-02-16 22:45 GMT
கும்பகோணம்,

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கும்பகோணத்தில் மகாமக தொடர்புடைய 12 சிவன்கோவில்களும், 5 வைணவ கோவில்களும் உள்ளன. இதை தவிர சுமார் 40-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள குளங்களை ஆக்கிரமிப்பாளர்கள் தூர்த்து கட்டிடங்களை கட்டினர். மேலும் குளத்திற்கு வரும் நீர்பாதையையும் ஆக்கிரமித்துள்ளனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் என்பவர்

கும்பகோணம் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குளங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சோலைமலை ஆக்கிரமிப்பு தொடர்பாக உள்ள குளங்களை நேரில் பார்வையிட்டு அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு

அதன்படி நீதிபதி சோலைமலை நேற்று கும்பகோணம் நகராட்சி பயணியர் விடுதிக்கு வந்தார். பின்னர் அவர் மற்றும் வழக்கு தொடர்ந்த யானை ராஜேந்திரன், சுந்தரவிமல்நாதன், நிலஅளவைத்துறை உதவி இயக்குனர் ராஜ்குமார், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆனந்தன், தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோருடன் ஆய்வு பணியை தொடங்கினார்.

வட்டிப்பிள்ளையார்கோவில் சாலையில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள குளத்தை பார்வையிட்டார். அந்த குளம் தூர்வாராமல் பாதி தூர்ந்த நிலையில் காணப்பட்டதை பதிவு செய்தார். அங்கிருந்து நால்ரோடு அருகே உள்ள பைராகி தோப்பில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான குளத்தை பார்வையிட்டார். அங்கு நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் குறித்து கேள்வி எழுப்பினார்.

விசாரணை

தொடர்ந்து அங்கிருந்து ஆயிகுளத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு குளத்தை தூர்த்து அதில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தியது எதற்காக என்றும், அங்கு மின்கம்பங்கள் உள்ளது குறித்தும், குளத்தின் நடுவே சிறிய அளவில் வெட்டப்பட்ட குட்டை குறித்தும் விசாரணை நடத்தினார். பின்னர் சோமேஸ்வரன் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்திருந்ததாக கோவில் வரலாற்றில் தெரிவிக்கப்பட்டிருந்த சந்திர புஷ்கரணிக்கு(குளம்) சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கோவிலின் எதிரே குளத்திற்கு தீர்த்தவாரிக்கு செல்லமுடியாமல் கடைகள் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததை ஆய்வு செய்தார். அத்துடன் ஒவ்வொரு இடங்களையும் புகைப்படம் எடுத்து பதிவு செய்தார்.

இதையடுத்து பொற்றாமரைக்குளத்துக்கு சென்று காவிரில் இருந்து வரும் நீர் பாதையையும், மேல்நிலை தொட்டியிலிருந்து வரும் நீர்வரத்து பாதையையும் ஆய்வு செய்தார். மேலும் குளத்தின் நான்கு மூலையிலும் உள்ள மண்டபங்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கடைகளையும் பார்வையிட்டார். அவர் ஆய்வு செய்த அனைத்து இடங்களையும் புகைப்படங்கள் எடுத்ததுடன், குறிப்புகளை பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து மாலையில் மல்லுகசெட்டிகுளம், செம்போடை குட்டை, மகாமக குளம், அனுமார்குளம், தாமரைக்குளம், செக்காங்கண்ணி உள்ளிட்ட குளங்களை சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீதிபதி இன்றும் (வெள்ளிக்கிழமை) குளங்களை ஆய்வு செய்ய உள்ளதாக தெரிகிறது. 

மேலும் செய்திகள்