பொதுத்தேர்தலை நடத்தினால் மட்டுமே தமிழகத்துக்கு நிரந்தரமான ஆட்சியை தரமுடியும் ஈஸ்வரன் பேட்டி

சட்டமன்ற பொதுத்தேர்தலை நடத்தினால் மட்டுமே நிரந்தரமான ஆட்சியை தமிழகத்துக்கு தரமுடியும் என நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.

Update: 2017-02-16 21:23 GMT
நாமக்கல்,

ஈஸ்வரன் பேட்டி


கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழகஅரசு சார்பில் அறிவிக்கப்பட்ட வறட்சி நிவாரணத்தை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கவேண்டும். அரசியல் காரணங்களுக்காக நிவாரணம் வழங்காமல் காலம் தாழ்த்துவது கண்டிக்கதக்கது. ரப்பர் விலை உயர்வு காரணமாக டயர் ரீட்ரேடிங் கட்டணம் உயர்ந்து, தொழில் பாதிக்கப்படுகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் கருத்தை கேட்டுதான் முடிவு செய்திருக்க வேண்டும். மக்கள் விரும்பினால் சட்டப்பேரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினரை திரும்பப்பெறும் உரிமை அளிக்கப்பட வேண்டும். அதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்காக பணியாற்றுவார்கள், ஒழுக்கத்துடனும் இருப்பார்கள்.

நிரந்தரமான ஆட்சி


அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினையில் தி.மு.க. பின்னிருந்து இயக்குகிறது என்பதற்கு எவ்வித முகாந்திரமும் தெரியவில்லை. தி.மு.க.வை பொறுத்தவரை, அதன் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பின்கதவு வழியாக நாங்கள் ஆட்சியை பிடிக்க எந்த முயற்சியும் செய்யமாட்டோம் என்றும், பொதுத்தேர்தல்தான் எங்களின் லட்சியம் என்றும் சொல்லி இருக்கிறார்.

அ.தி.மு.க. என்றாலே தி.மு.க.வின் எதிர்ப்பு அரசியல்தான் என்ற நிலையில் அ.தி.மு.க.வினர் இந்த குற்றச்சாட்டினை தெரிவிக்கின்றனர். பா.ஜனதா தலைவர்கள் சிலர் நேரடியாகவே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பேசிவருவதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சட்டமன்ற பொதுத்தேர்தலை நடத்தினால் மட்டுமே நிரந்தரமான ஆட்சியை தமிழகத்துக்கு தரமுடியும். எடப்பாடி பழனிசாமி அல்ல, யார் முதல்–அமைச்சராக வந்தாலும் சசிகலா குடும்பத்தினர் சொல்வதைதான் கேட்கவேண்டும். இந்த சூழலில் தமிழகத்தின் ஆட்சி எந்தவித செயல்பாடும் இல்லாமல் பெயரளவுக்கு மட்டுமே இருக்கும். இப்படியொரு ஆட்சி தமிழக மக்களுக்கு நல்லதல்ல. இதன் அடிப்படையில்தான் தமிழக சட்டமன்றத்துக்கு பொதுத்தேர்தல் நடத்தவேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதனை நாங்கள் வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

செயற்குழு கூட்டம்


முன்னதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில இளைஞர்அணி செயலாளர் சூரியமூர்த்தி, விவசாய அணி இணை செயலாளர் சந்திரசேகர், மாவட்ட தலைவர் அசோகன், துணை செயலாளர் ரவிச்சந்திரன், விவசாய அணி மாவட்ட தலைவர் பழனிமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்