தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ் சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுவன் பலி டிரைவர் தப்பி ஓட்டம்

நம்பிகானஹள்ளி கிராமத்தில் தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ் சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுவன் பலியானான். இந்த விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

Update: 2017-02-16 19:47 GMT

கோலார் தங்கவயல்,

நம்பிகானஹள்ளி கிராமத்தில் தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ் சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுவன் பலியானான். இந்த விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

சிறுவன் உடல் நசுங்கி பலி

கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா நம்பிகானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவன் சுகாஷ்(வயது 5). இந்த சிறுவன் மாலூர் டவுனில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். இவன் தினமும் காலையில் வீட்டிலிருந்து பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் பள்ளிக்கூடத்திற்கு சென்று வருவது வழக்கம்.

அதுபோல் நேற்று காலையிலும் பள்ளிக்கு செல்ல புறப்பட்டான். காலை 9 மணியளவில் வீட்டின் அருகே பள்ளி பஸ்சுக்காக காத்து நின்றான். அப்போது அந்த பஸ் அங்கு வந்தது. பின்னர் டிரைவர் பஸ்சை வளைவில் இருந்து திருப்புவதற்காக பின்னோக்கி இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் சுகாஷ் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானான்.

டிரைவர் தப்பி ஓட்டம்

இதைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விரைந்து வருவதற்குள், பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து மாலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பஸ் டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள். பஸ்சின் சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுவன் உடல் நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்