முத்தையாபுரம் அருகே 2 வீடுகள் தீயில் எரிந்து நாசம் மின் கம்பிகளில் லாரி உரசியதால் விபரீதம்

முத்தையாபுரம் அருகே மின் கம்பிகளில் லாரியின் மேல் பகுதி உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில், அருகிலிருந்த 2 வீடுகள் எரிந்து நாசமாகின.

Update: 2017-02-16 20:45 GMT

ஸ்பிக்நகர்,

முத்தையாபுரம் அருகே மின் கம்பிகளில் லாரியின் மேல் பகுதி உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில், அருகிலிருந்த 2 வீடுகள் எரிந்து நாசமாகின.

தீ விபத்து

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் சூசைநகர் பகுதியையொட்டி சுடுகாடு செல்லும் சாலை ஒன்று உள்ளது. அந்த சாலை வழியாக அந்த பகுதியில் உள்ள தனியார் கன்டெய்னர் குடோனுக்கு லாரிகள் அடிக்கடி செல்வது வழக்கம். நேற்று மதியம், அந்த சாலை வழியாக லாரி ஒன்று சென்றது. அப்போது அந்த சாலையின் மேலே சென்ற மின்சார கம்பிகளை லாரி தட்டி சென்றது. இதில் அந்த மின்சார கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி, தீப்பொறி ஏற்பட்டு, சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் மீது விழுந்தது. இதில் 2 மரங்கள் முற்றிலும் எரிந்தன.

2 வீடுகள் சாம்பலானது

அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், மரங்களை ஒட்டி சாலை ஓரத்தில் இருந்த கூலி தொழிலாளிகளான பழனி (வயது 55) மற்றும் கன்னிச்சாமி (56) ஆகியோரின் குடிசை வீடுகள் மீது தீப்பொறி விழுந்து தீ பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அந்த 2 குடிசை வீடுகளும் தீயில் கருகி சாம்பலாகின. இதில் அந்த வீடுகளில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது.

அரசு நிவாரண உதவி

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தாசில்தார் சங்கரநாராயணன், வருவாய் ஆய்வாளர் செல்வபூபதி, முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேசுவரன், கிராம நிர்வாக அதிகாரி செல்வக்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரத்தை தாசில்தார் வழங்கினார். இந்த தீ விபத்து குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை அடைப்பு

இதற்கிடையே சுடுக்காட்டுக்கு செல்வதற்காக ஒதுக்கப்பட்ட சாலையில் கனரக வாகனங்கள் செல்வதை கண்டித்து அந்த சாலையில் பொதுமக்கள் முட்செடிகளை வைத்து சாலையை அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்