மாட்டுங்காவில் பரிதாபம் பழைய கட்டிடம் இடிந்து கார் மீது விழுந்ததில் டிரைவர் பலி
மாட்டுங்காவில் பழைய கட்டிடம் இடிந்து கார் மீது விழுந்ததில், அந்த காரின் டிரைவர் உடல் நசுங்கி பலியானார்.
மும்பை,
மாட்டுங்காவில் பழைய கட்டிடம் இடிந்து கார் மீது விழுந்ததில், அந்த காரின் டிரைவர் உடல் நசுங்கி பலியானார்.
பழைய கட்டிடம்மும்பை மாட்டுங்கா இந்து காலனி, பால்சந்திராரோடு பகுதியில் 3 மாடிகள் கொண்ட பழைய கட்டிடம் இருந்தது. இங்கு புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்காக அந்த கட்டிடத்தை இடித்து தள்ளும் பணி நடந்து வருகிறது. நேற்று பொக்லைன் எந்திரங்கள் மூலம் அந்த கட்டிடத்தை இடித்து தள்ளும் பணி நடந்தது.
நேற்று மாலை 4.30 மணியளவில் பணி நடந்துகொண்டிருந்த போது கட்டிடத்தின் மேல்பாகம் பயங்கர சத்தத்துடன் கீழே சரிந்து விழுந்தது. இதில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் வாடகை கார் ஒன்றின் மீது இடிபாடுகள் விழுந்து அமுக்கின.
கார் டிரைவர் பலிஇந்த சம்பவத்தின் போது அந்த காருக்குள் டிரைவர் இருந்து இருக்கிறார். இதில் இடிபாடுகள் விழுந்து அமுக்கியதில் கார் அப்பளமானது. மேலும் காரில் இருந்த டிரைவர் இருக்கையிலேயே உடல் நசுங்கி பிணமானார். இதுபற்றி தகவல் அறிந்த மாட்டுங்கா போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சுமார் மணி நேரத்திற்கு பிறகு கார் டிரைவரின் உடல் இடிபாடுகளுக்கு மத்தியில் இருந்து மீட்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவரது பெயர் சிந்தராஜ் கவுதம்(வயது25) என்பது மட்டும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.