குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

அறந்தாங்கி பஸ் நிலையம் அருகே குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2017-02-15 22:45 GMT
அறந்தாங்கி,

குளத்தில் தேங்கும் கழிவுநீர்

அறந்தாங்கி நகர்ப்புற கழிவுநீர் அனைத்தும் ஒருசேர நெடுங்குளத்தை அடைந்து அங்கிருந்து அதன் வடிகால் வழியாக சென்று இறுதியாக கடலை சென்றடைகிறது. தற்போது நகர்புறத்தின் ஒட்டு மொத்த கழிவுகளும் நெடுங்குளத்தின் மையத்தை ஆக்கிரமித்து தேங்கி கிடக்கிறது. மேலும் இதில் பல உயிரினங்கள் தங்கள் வாழ்கைப்பயணத்தை தொடங்க ஆரம்பித்துவிட்டன.

மேலும் கொசு உற்பத்தியும் அதிகரித்து நகர்புற மக்களை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் குழந்தைகள் வயதான பெரியவர்கள் அனைவருக்கும் டெங்கு மலேரியா காய்ச்சல் வரத்தொடங்கி விட்டது. மேலும் தொற்று நோயால் இப்பகுதியை சேர்ந்த இருவர் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியானது நகரத்தின் மையப்பகுதியாகவும் விளங்கு கிறது. இதன் அருகாமையில்தான் பஸ் நிலையம், காந்தி பூங்கா, ரெயில் நிலையம் மற்றும் ஒருங்கிணைந்த அரசு அலுவலகங்கள் போன்றவை உள்ளன.

மாசுபட்ட அசுத்தம்

மேலும் இப்பகுதி பஸ் நிலையம் அருகாமையில் இருப்பதாலும் பயணிகள் பொதுமக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கப்கள் ஆகியவற்றால் மேலும் மாசுபட்டு அசுத்தமாக உள்ளது. பயணிகளும் பொதுமக்களும் தங்களின் அவசர நிமிர்த்தத்தை கருதி அந்த இடத்திலேயே இயற்கை உபாதைகளை கழித்து விட்டு செல்லும் அவல நிலையும் உள்ளது.

எனவே இது குறித்து நகராட்சி நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டும் நகர் புறத்திலுள்ள அனைத்துகழிவு நீர் வாரிகளையும் முறையாக பராமரித்தும், முட்புதர்களை அகற்றியும் கழிவு நீர் தேங்கி நிற்காமல் செல்ல முறையான வழிமுறைகளை அமைக்கவும் பொதுமக்கள் அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்