வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை-ரூ.40 ஆயிரம் திருட்டு

புதுமண தம்பதி விருந்துக்கு வெளியூர் சென்றிருந்த போது வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை- ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுதொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-02-15 23:00 GMT
திருத்துறைப்பூண்டி,

புதுமண தம்பதி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகன் வினோத்( வயது28). இவருடைய மனைவி சுவேதா. இவர்களுக்கு கடந்த 9-ந்தேதி தான் திருமணம் நடைபெற்றது. வினோத் ஆலத்தம்பாடி கடை தெருவில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் வினோத் தனது மனைவி சுவேதாவுடன் விருந்திற்காக ஆயக்காரன்புலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் புதுமண தம்பதி ஊரில் இருந்து நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஆலிவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வினோத்தின் பக்கத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு 2 மணியளவில் 2 மர்ம நபர்கள் வினோத் வீட்டில் நகை-பணம் மற்றும் வெள்ளிபொருட்களை திருடி கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

போலீஸ் விசாரணை

திருவாரூரில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் திருட்டு நடந்த வீட்டில் இருந்த கைரேகைகளை பதிவுசெய்தனர். மேலும், போலீஸ் மோப்ப நாய் மெர்ஸி சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்விபிடிக்கவில்லை. இதுகுறித்து வினோத் கொடுத்த புகாரின் பேரில் ஆலிவலம் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி தேடிவருகின் றனர். 

மேலும் செய்திகள்