எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இன்றும், நாளையும் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இன்றும், நாளையும் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மண்டல அரசுத்தேர்வுகள் துணை இயக்குனர் முருகன் தெரிவித்தார்.

Update: 2017-02-15 22:15 GMT
தஞ்சாவூர்,

சேவை மையங்கள்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத அரசுத்தேர்வுகள் இயக்ககத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாட்களுக் குள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் இன்றும்(வியாழக்கிழமை), நாளையும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்டம் வாரியாக ஆண், பெண் தனித்தேர்வர்களுக்கு தனித்தனியே சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தனித்தேர்வர்கள் இந்த மையங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். சேவை மையங்களின் விவரத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

மேலும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும், மாவட்ட கல்வி அலுவலகங்களிலும், அரசுத்தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம். அரசுத்தேர்வு சேவை மையங்கள் மூலம் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்

அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே கருத்தியல் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். செய்முறை பயிற்சி வகுப்பு நடைபெற்ற சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இருந்து செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டதற்கான உரிய ஆதாரத்தை பெற்று அவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களில் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தை தவிர ஏனைய பாடங்களில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம் ரூ.125. இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.500 மற்றும் ஆன்-லைன் பதிவு கட்டணமாக ரூ.50 என மொத்தம் ரூ.675-யை சேவை மையங்களில் செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மையங்களின் விவரம் தேர்வுக்கூட அனுமதி சீட்டில் குறிப்பிடப்படும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்