தேவூர் பகுதியில் தண்ணீர் இன்றி கருகும் வாழைகள் விவசாயிகள் கவலை

தேவூர் சுற்றுவட்டார பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் வாழைகள் கருகி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2017-02-15 23:00 GMT
தேவூர்,

கருகிய வாழைகள்

சேலம் மாவட்டம், தேவூர் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் விவசாயிகள் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஆண்டு கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்தி வாழை சாகுபடி செய்திருந்தனர்.

தற்போது தண்ணீர் பற்றாக்குறையால் வாழை மரங்களில் வாழைத்தார் தள்ளி பழம் தரும் தருவாயில் உள்ள நிலையில் மரங்கள் கருகி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து காவேரிப்பட்டி பகுதியில் வாழை சாகுபடி செய்த விவசாயி சந்தோஷ் கண்ணன் கூறியதாவது:-

காவேரிப்பட்டி இறங்காடு பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் வாழை சாகுபடி செய்வதற்காக 2 ஆயிரம் வாழைக்கன்றுகள் நடவு செய்தேன். ஆந்திர ரஸ்தாளி வகை ரகமான வாழை கன்றுகளை நீர் பாய்ச்சி, களை அகற்றி பராமரித்து வந்தேன். இதற்காக ரூ.2 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். இந்த வாழைகளில் அறுவடை செய்தால் ரூ.7 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.

கடும் வறட்சி

தற்போது வாழை மரங்கள் நன்கு வளர்ந்து வாழை குலைதள்ளி பழம் தரும் தருவாயில் உள்ளன. ஆனால் தேவூர் பகுதியில் கடும் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் கிணற்றில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் வாழை பழங்கள் திரட்சியாக வளர்ந்து விவசாயிகளுக்கு அதிக லாபம் தருவதற்கு போதிய தண்ணீர் விட முடியாததால் வாழை மரங்கள் கருகி உள்ளன. இதனால் இந்த பகுதியில் உள்ள வாழை விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்