வங்கிகள், கடைகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க தொடர்ந்து மறுப்பு பொதுமக்கள் அவதி

சிவகாசி பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்களை வங்கிகள், கடைகளில் வாங்க தொடர்ந்து மறுப்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2017-02-15 22:15 GMT
10 ரூபாய் நாணயம்

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிப்பதற்கு என்று மத்திய அரசு நான்கு மாதங்களுக்கு முன்பு பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த நாள் முதல் இன்று வரை பொதுமக்களின் கைகளில் பணப்புழக்கம் இல்லை. அந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிதாக 2,000 மற்றும் 500 ரூபாய் வந்த நிலையிலும் தட்டுப்பாடு தீரவில்லை.

சில்லறை தட்டுப்பாட்டை நீக்குவதற்காக ரிசர்வ் வங்கி இருப்பில் இருந்த அழுக்கடைந்த 100, 50, 20 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டது. 10 ரூபாய் நாணயங்களையும் அனைத்து வங்கிகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தது. பணத்தட்டுப்பாடு இருந்த நிலையில் கடைகள், வணிக நிறுவனங்கள், பஸ்களில் 10 ரூபாய் நாணயங்கள் அதிகமாக மக்களால் கொடுத்து வாங்கப்பட்டது.

இந்நிலையில் திடீரென கிளப்பப்பட்ட புரளியால் நாணயங்கள் வாங்குவதை அனைத்து தரப்பினருமே தவிர்த்து வந்தனர். இதுகுறித்து ரிசர்வ் வங்கி பலமுறை 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று அறிவித்த பின்பும் பொதுமக்களும், வியாபாரிகளும் நாணயங்கள் வாங்குவதை புறக்கணித்து வருகின்றனர்.

வங்கிகளும் மறுப்பு

பொதுமக்கள் மறுத்து வரும் நிலையில் சிவகாசி பகுதிகளில் உள்ள வங்கிகளிலும் 10 ரூபாய் நாணயங்களை கொடுத்தால் வாங்க மறுக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் வங்கி அதிகாரிகளிடம் கேள்வி கேட்டால், ஏற்கனவே வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்கள் அளவுக்கு அதிகமாக இருப்பு இருப்பதால் அதனை பாதுகாக்க வசதி இல்லாததால் வாங்க முடியாது என்று கூறுகின்றனர்.

ரிசர்வ் வங்கி அறிவித்த பின்பும் வங்கிகள் முதற்கொண்டு யாருமே 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால் கையில் காசு இருந்தும் அதனை செலவழிக்க முடியாத நிலையில் சிவகாசி மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே 10 ரூபாய் நாணயங்களை வங்கிகள் முதற்கொண்டு அனைத்து தரப்பினரும் வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்