முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகளில் இடம் பிடித்து கொடுக்க கமி‌ஷன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு

முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகளில் இடம் பிடித்து கொடுக்க பயணிகளிடம் கமி‌ஷன் பெறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

Update: 2017-02-15 22:15 GMT
முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டி

பண்டிகை காலம் மற்றும் வார இறுதிநாட்களில் ஏராளமானோர் ரெயிலில் பயணம் செய்கிறார்கள். கட்டணம் குறைவு மற்றும் குடும்பத்துடன் பயணிக்க உள்ள வசதி காரணமாக ரெயில் பயணம் செய்வதையே பலரும் விரும்புகிறார்கள். இதில் முன்பதிவு செய்பவர்கள் சிரமமின்றி பயணம் செய்து வருகின்றனர்.

ஆனால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நிற்க கூட இடம் கிடைக்காத அளவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். முக்கிய ஊர்களுக்கு செல்லும் ரெயில்களில் பல நேரங்களில் இளைஞர்கள் படியில் தொங்கியபடி செல்வதை காண முடிகிறது.

புறப்படும் ரெயில் நிலையத்தில் முன்னதாகவே ரெயில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடத்தை சிலர் பிடித்துக் கொள்கின்றனர். பின்னர் அவர்கள் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க வரும் பயணிகளிடம் உட்கார இடத்துடன் டிக்கெட் எடுத்து தருவதாக கூறி கமி‌ஷன்தொகை பெற்றுக் கொள்கின்றனர்.

இதனால் ரெயில் நிலையத்துக்கு முன்னதாகவே வந்து முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து ரெயிலில் உட்கார வரும் பயணிகள், அவர்களுடன் வாக்குவாதம் செய்யும் நிலை உள்ளது. அதோடு பயணிகளிடம் ரெயிலில் உட்கார வேண்டும் என்றால் கமி‌ஷன் தர வேண்டும் என்று மிரட்டவும் செய்கின்றனர். ஆனால் கமி‌ஷன்தொகை கொடுத்தவர்கள் தாமதமாக வந்தாலும் முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டி யில் முன்பதிவு செய்தது போல் அமர்ந்து செல்லும் நிலை உள்ளதாக பாதிக்கப்பட்ட பயணிகள் கூறுகின்றனர்.

நடவடிக்கை

இது குறித்து கோவை ரெயில் நிலைய அதிகாரிகள் கூறியதாவது:–

கோவை ரெயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகளில் கமி‌ஷன் தொகை பெற்று பயணிகளுக்கு உட்கார இடம் பிடித்து கொடுப்பதாக புகார் வர வில்லை. ஆனாலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை–கோவை செல்லும் இன்டர்சிட்டி ரெயிலில் உள்ள முன்பதிவு இல்லாத பெட்டியில் ஒரு நபர் கமி‌ஷன்தொகை பெற்று பயணிகளுக்கு உட்கார இடம் பிடித்து கொடுத்து உள்ளார். அந்த நபர் ரெயில் பயணி போல் நடித்து இது போன்ற செயலில் ஈடுபட்டு உள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் அந்த நபரை பிடித்து நடவடிக்கை எடுத்து உள்ளனர். இது போன்று கமி‌ஷன் பெற்று ரெயிலில் இடம் பிடித்து கொடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்து உள்ளோம். இதற்காக கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப் பட்டு உள்ளது. இந்த நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 0427–2431010 அல்லது 182 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்