33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்து ஊழலுக்கு துணை நின்றவர் சசிகலா தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்து ஊழலுக்கு துணை நின்றவர் சசிகலா என்று ஈரோட்டில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2017-02-15 22:30 GMT
ஊழியர் கூட்டம்

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சி நிர்வாகிகள் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களில் பேச முடிவு செய்து உள்ளார். அதன்படி முதல் மாவட்டமாக நேற்று அவர் ஈரோடு வந்தார்.

ஈரோடு தெற்கு மாவட்ட ஊழியர் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இருதுருவ அரசியல்

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டு பயணத்தை தொடங்கி இருக்கிறேன். காலையில் ஒரு மாவட்டத்தில் ஊழியர் கூட்டமும், மாலையில் இன்னொரு மாவட்டத்தில் பொதுக்கூட்டமும் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த கூட்டங்களின் முக்கியத்துவம் என்னவென்றால் தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் இருதுருவ அரசியலை விட்டு தமிழக மக்களை மீட்டுக்கொண்டு வரவேண்டும். தி.மு.க., அ.தி.மு.க. 2 கட்சிகளும் ஊழல் கட்சிகள். இந்த கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. திராவிட கட்சிகள் இல்லாத மாற்று அரசியலை ஏற்படுத்த வேண்டும் என்ற மக்கள் சக்தியை உருவாக்குவதே பா.ஜனதாவின் நோக்கம். ஊழல் கறை படியாமல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் நட்பினால் இருக்கும்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, இறப்புக்கு பின்னரும் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு உள்ளார். 33 ஆண்டுகள் ஜெயலலிதாவின் உடன் இருந்து அவருக்கு ஊழலுக்கு துணை நின்றவர் சசிகலா. இவர்களின் ஊழல் பற்றி நீதிபதிகளே கண்டிக்கும் அளவுக்கு உள்ளது.

நிலையான ஆட்சி

நீதிமன்றம் தற்போது வழங்கி உள்ள தீர்ப்பு, ஊழல் அரசியல்வாதிகளுக்கு பாடமாக அமைந்து உள்ள நல்ல தீர்ப்பு. நல்லவர்கள், நேர்மையானவர்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை உருவாக்கும்.

தற்போதைய நிலையில் தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். அப்படி ஒரு ஆட்சி அமையவில்லை என்றால் தேர்தலை சந்திப்பது நல்லது. உள்ளாட்சி தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டும். தற்போதைய பரபரப்பில் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்து அரசு விலகி உள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. கூவத்தூரில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரம் சென்னை புறநகரிலேயே ஹாசினி என்ற குழந்தை பாலியல் வன்முறைக்கு உயிரிழந்து உள்ளது.

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இப்போதைய நிலையில் சட்டமன்றத்தில் வாக்கெடுப்புக்கு அறிவிப்பு வந்தாலும், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிக்கு சென்று மக்களிடம் பேசி, அந்த கருத்துடன் வந்து வாக்களிக்க செய்ய வேண்டும்.

நல்ல திட்டங்களுக்கு ஆதரவு

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், உள்துறை விவகாரங்களில் அனுபவம் உள்ளவர். எனவேதான் அத்தனை பரபரப்பு மிக்க நேரத்திலும் நிதானமாக நடவடிக்கை எடுத்தார். அதுபோல் இனி வரும் காலங்களிலும் நிதானமாக சரியான முடிவினை எடுப்பார்.

முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜனதா கட்சி உதவி செய்கிறது. எப்படிப்பட்ட உதவி என்றால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டு வர உதவி செய்தோம். உதய் மின் திட்டம் செயல்பாட்டுக்கு வர உதவி செய்தோம். எனவே தமிழகத்துக்கான நல்ல திட்டங்களை கொண்டு வர ஆதரவு அளித்து உதவி செய்வோம். அதாவது கட்சி ரீதியாக இல்லாமல் ஆட்சி ரீதியாக பா.ஜனதா கட்சி உதவி செய்யும்.

இவ்வாறு பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

பேட்டியின் போது மாநில செயலாளர் செந்தில் பாலசுப்பிரமணியம், வக்கீல் அணி தலைவர் என்.பி.பழனிச்சாமி, பிரசார அணி தலைவர் ஏ.சரவணன், செயற்குழு உறுப்பினர் பொன்.ராஜேஸ்குமார், தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், செய்தி தொடர்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்