மானூர் அருகே காற்றாலையில் ஒயர் திருடிய கல்லூரி மாணவர் கைது மேலும் 4 பேருக்கு வலைவீச்சு

மானூர் அருகே காற்றாலையில் ஒயர் திருடிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் வலைவீச்சு தேடிவருகிறார்கள்.

Update: 2017-02-15 19:31 GMT

மானூர்,

மானூர் அருகே காற்றாலையில் ஒயர் திருடிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் வலைவீச்சு தேடிவருகிறார்கள்.

ஒயர் திருட்டு

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தென்கலம் பகுதியில் தனியார் காற்றாலை உள்ளது. இந்த காற்றாலையில் கடந்த 17–10–2016 அன்று மர்ம கும்பல் புகுந்து அங்கு இருந்த சுமார் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள ஒயர்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து காற்றாலை நிறுவனத்தினர் மானூர் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சி தென்புறம் வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்தார். அவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

கல்லூரி மாணவர் கைது

அதில், அவர் பாளையங்கோட்டை அருகே உள்ள மருதூர் கீழத்தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் செல்வராஜ் (வயது 19) என்பதும், பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் தனது பள்ளி நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து செல்வராஜ் பல்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் மானூர் அருகே உள்ள காற்றாலையில் ஒயர்களை திருடியதும் தெரியவந்தது.

இதுகுறித்து மானூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தார். அவரிடம் இருந்து அரிவாள், மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக செல்வராஜின் நண்பர்கள் 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்