ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தென்திருப்பேரை,
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மாசி திருவிழாதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களில் கடைசி தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா, கடந்த 7–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். 5–ம் திருநாள் இரவில் கருடசேவை நடந்தது.
தேரோட்டம்விழாவின், சிகர நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா, 9–ம் திருநாளான நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு நம்மாழ்வார் தேரில் எழுந்தருளினார். காலை 9.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான ஆண்களும், பெண்களும் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கீழ ரத வீதியில் இருந்து புறப்பட்டு, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக காலை 11.45 மணிக்கு கோவில் நிலையை வந்து சேர்ந்தது.
விழாவில் கோவில் நிர்வாக அலுவலர் விசுவநாத், அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார், முன்னாள் தொகுதி இணை செயலாளர் பாலசுப்பிரமணியன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாச அறக்கட்டளை ஆலோசகர் முருகன், வ.உ.சி.இளைஞர் பேரவை தலைவர் கோமதிநாயகம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சப்பரத்தில் எழுந்தருளல்இந்த ஆண்டு தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்பத்திருவிழா நடைபெறவில்லை. அதற்கு பதிலாக தெப்பக்குளத்தைச் சுற்றிலும் பெருமாளும், நம்மாழ்வாரும் சப்பரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 10–ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) இரவில் பெருமாளும், 11–ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) இரவில் நம்மாழ்வாரும் தெப்பக்குளத்தைச் சுற்றிலும் சப்பரத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 12–ம் திருநாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதியம் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.