ஜெயலலிதாவை தவறாக வழிநடத்தியவர் சசிகலாதான் த.மா.கா. மாநில இளைஞர் அணி தலைவர் குற்றச்சாட்டு
ஜெயலலிதாவை தவறாக வழிநடத்தியவர் சசிகலாதான் என்று த.மா.கா. இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவர் எம்.யுவராஜா ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அ.தி.முக. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு கர்நாடக சிறப்பு நீதிபதி அளித்த தீர்ப்பினை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து உள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பினை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முழுமனதுடன் வரவேற்கிறது. இந்த தீர்ப்பின் மூலம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அரசியல்வாதிகள் ஊழல் செய்தால் தக்க தீர்ப்பு வழங்கப்படும் என்பதை இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.
ஏற்கமாட்டார்கள்தற்போது சசிகலா அறிவுரையின் பேரில் எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.க. சட்டமன்றக்குழு தலைவராக தேர்ந்து எடுத்து உள்ளனர். அவருக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தமிழக கவர்னருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. சசிகலாவை எப்படி தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையோ, அதுபோல் அவர் தேர்வு செய்தவர்களையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே தற்போதைய சூழ்நிலையில் கவர்னர் அவசரமின்றி, நிதானமாக நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி அரசியல் லாபம் தேடும் முயற்சியை கைவிட வேண்டும்.
குற்றச்சாட்டுமுன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனைத்து பணிகளிலும் தூண்டுதலாகவும், வழிகாட்டுதலாகவும் இருந்தவர் வி.கே.சசிகலா என்று அவரே கூறி உள்ளார். அதன்படி பார்த்தால், ஜெயலலிதா செய்த அனைத்து தவறுகளுக்கும் அவரை வழி நடத்தியவரும் வி.கே.சசிகலாதான் என்ற குற்றச்சாட்டினை முன்வைக்கிறேன்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா விரும்பினார். ஆனால் அந்த கூட்டணி அமையும் அனைத்து வழிகளையும் அடைத்து, தலைவர்களை சந்திக்கவிடாமல் செய்தவர் சசிகலா. இதுபோன்று ஜெயலலிதாவை அனைத்து நடவடிக்கைகளிலும் தவறாக வழிநடத்தியவர் அவர்தான். தற்போதைய நிலையில் ஏற்கனவே முதல்–அமைச்சர் பொறுப்பு வகித்தவர் என்கிற முறையில் ஓ.பன்னீர்செல்வம் நல்ல ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.
ஆதரவுஎங்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை நிலையான, மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஆட்சிக்கு ஆதரவு அளிப்போம். கட்சியின் முடிவு குறித்து கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பார்.
இவ்வாறு த.மா.கா. இளைஞர் அணி மாநில தலைவர் எம்.யுவராஜா கூறினார். பேட்டியின்போது மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரமேஷ் உடன் இருந்தார்.