பயறு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம் கலெக்டர் தகவல்

பயறு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படுவதாக கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

Update: 2017-02-14 21:30 GMT

தேனி

பயறு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படுவதாக கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்தார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–

மானியம் ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் வறட்சியான சூழலில், அதிக நீர்த் தேவை பயிர்களுக்குப் பதிலாக பயறு சாகுபடியினை ஊக்குவிக்கும் பொருட்டு, நீர் பாசன வசதி உள்ள இடங்களில் பயறு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தினை அரசு செயல்படுத்திட அனுமதி வழங்கி உள்ளது.

இத்திட்டம் தேனி மாவட்டத்தில் நீர் பாசன வசதியுள்ள இடங்களில் செயல்படுத்திட ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் மானியம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயறு வகைப் பயிர்களில் செயல் விளக்கத்திடல் அமைக்கவும், தெளிப்பு நீர்க்கருவி அமைக்கவும் மானியம் உள்ளது.

பயறு வகை பயிரில் ஒரு ஏக்கர் பரப்பளவில் விவசாயிகளுக்கு செயல் விளக்கத்திடல் அமைக்க பயறு வகை விதைகள் 8 கிலோ மற்றும் டிரைக்கோடெர்மா, பூஜாஹைட்ரோஜல், பயறு நுண்ணூட்டக் கலவை, திரவ உயிர் உரங்கள், தெளிப்பிற்கான டி.ஏ.பி. உரம் ரூ.2 ஆயிரம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

செயல்விளக்க திடல்

தேனி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் செயல்விளக்கத்திடல் அமைக்கப்படவுள்ளது. பாசிப்பயறு மற்றும் உளுந்து பயிர்களில் செயல்விளக்கத்திற்கான இடுபொருள்கள் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகிட வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்திற்கு 70 தெளிப்புநீர் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் 100 சத மானியத்திலும், இதர விவசாயிகள் 75 சத மானியத்திலும் இத்திட்டத்தின் மூலம் பலன் பெறலாம். ஒரு யூனிட்டிற்கு ரூ.19 ஆயிரத்து 600 வீதம் விவசாயிகளுக்கு ஏற்றவாறு மானியம் வழங்கப்படும்.

அதேபோல், தேனி மாவட்டத்திற்கு 53 மழைத்துவான் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.31 ஆயிரத்து 600 வீதம் மானியம் பெறலாம்.

நுண்ணீர் பாசன கருவிகள் தேவைப்படும் விவசாயிகள், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, சிட்டா, அடங்கல், ரே‌ஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை நகல் போன்ற ஆவணங்களோடு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் பங்கேற்று குறைந்த அளவு நீரை பயன்படுத்தி அதிக அளவில் பயறு சாகுபடி மேற்கொண்டு பயறு உற்பத்தியினையும் கூடுதல் வருவாயையும் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்