கேக் தயாரிக்கும் தொழிற்சாலையில் 12 ஆயிரம் உடைந்த, அழுகிய முட்டைகள் பறிமுதல்

காரிமங்கலத்தில் கேக் தயாரிக்கும் தொழிற்சாலையில் 12 ஆயிரம் உடைந்த மற்றும் அழுகிய முட்டைகளை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.

Update: 2017-02-14 23:00 GMT
காரிமங்கலம்,

கலெக்டர் உத்தரவு

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலக சாலையில் இயங்கி வரும் கேக் தயாரிக்கும் தொழிற்சாலையில் உடைந்த மற்றும் அழுகிய முட்டைகளை பயன்படுத்தி கேக் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக கலெக்டர் விவேகானந்தனுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதுதொடர்பாக உரிய விசாரணை மற்றும் களஆய்வு மேற்கொள்ளுமாறு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் பிருந்தா தலைமையில் அலுவலர்கள் காரிமங்கலத்தில் உள்ள அந்த கேக் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கேக் தயாரிக்க தொழிற்சாலையில் உடைந்த மற்றும் அழுகிய முட்டைகளை பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் கேக் தயாரிக்க பேக்கிங்கிற்கு பட்டர் பேப்பருக்கு பதிலாக செய்தி தாள்களை பயன்படுத்தியது தெரியவந்தது.

முட்டைகள் பறிமுதல்

அதேபோல் அயோடின் கலக்காத உப்பை தொழிற்சாலையில் பயன்படுத்தியதும் அலுவலர்களின் ஆய் வில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கேக் தொழிற்சாலையில் 12 ஆயிரம் உடைந்த மற்றும் அழுகிய நிலையில் இருந்த முட்டைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த முட்டைகள் அலுவலர்கள் முன்னிலையில் குழித்தோண்டி புதைக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நாகராசன், நந்தகோபால், கந்தசாமி கோபி ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்