ஆனைக்குட்டம் அணை பகுதியில் அதிகரித்து வரும் மணல் திருட்டு

ஆனைக்குட்டம் அணை பகுதியில் அதிகரித்து வரும் மணல் திருட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Update: 2017-02-14 22:00 GMT

திருத்தங்கல்,

ஆனைக்குட்டம் அணையில் மணல் திருட்டு அதிகரித்து வருகிறது எனவும் இதில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனைகுட்டம்

ஆனைக்குட்டம் அணை விருதுநகர் மற்றும் திருத்தங்கல் பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. இந்த அணையின் ‌ஷட்டர் பழுதாகி இருப்பதால் தண்ணீரை தேக்கிவைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டில் விருதுநகர் சிக்கித்தவித்து வருகிறது,. அணையும் வறண்டு மேய்ச்சல் நிலமாக காட்சி தருகிறது.

இந்த நிலையில் ஆற்றுப்படுகையில் மணல் திருட்டு தங்குதடையின்றி நடந்து வருகிறது. அவரவர் சக்திக்கு ஏற்றவாறு லாரி, டிராக்டரைக் கொண்டு வந்து மணல் எடுத்துச்செல்கின்றனர். மணல் மட்டுமின்றி அந்தப்பகுதியில் உள்ள மண்ணை சிலர் தங்களது தோட்டத்துக்கு கொண்டு சென்று நிலத்தி மேடாகவும் மாற்றி வருகின்றனர்.

நிலத்தடி நீர் மட்டம்

அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. முன்பு 40 அடியில் தண்ணீர் கிடைத்து வந்தது. தற்போது 250 அடியில்தான் தண்ணீர் கிடைக்கிறது. மணல் எடுப்போர் ஆற்றுப்படுகையில் 10 அடி ஆழம் வரை தோண்டி முழுவதுமாக மணலை சுரண்டி எடுத்து விடுகின்றனர்.

ஆற்றுப்படுகையை சுரண்டியது போதாது என்று தற்போது ஆற்றுக்கரையினை வெட்டி எடுக்கத்தொடங்கி விட்டனர். இதனால் மழை பெய்யும்போது வெள்ளம் அணைக்கு செல்லாமல் தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதாக அந்தப்பகுதியில் வசிப்போர் தெரிவித்தனர்.

நடவடிக்கை

அதிகாரிகளின் கவனத்துக்கு இதனை கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மணல் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையினை முழுவதுமாக களவாடிச்செல்லும் முன்பு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்