ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தீபா பேரவையினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை வரவேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள், தீபா பேரவையினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Update: 2017-02-14 23:00 GMT
புதுக்கோட்டை,

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள், தீபா பேரவையினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு புதுக்கோட்டை ஜெ.தீபா பேரவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் எம்.ஜி.ஆர் சிலையின் பாதத்தில் பால் ஊற்றப்பட்டது. தொடர்ந்து எம்.ஜி.ஆர். சிலையின் அருகே பட்டாசு வெடித்தும், அந்த வழியாக வந்த பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கியும், ஆட்டம் போட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் பகுதியிலும் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கீரமங்கலம்-வடகாடு

சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு எதிரொலியாக கீரமங்கலம் பஸ் நிலையம் பகுதியில் அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் துரை தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேப்போல கொத்தமங்கலம் கடைவீதியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதைப்போல வடகாடு பெரியகடைவீதியில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் ஜெ.தீபா பேரவையினர் தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திருவரங்குளம்-காரையூர்

திருவரங்குளம் கடைவீதியில் ஜெ.தீபா பேரவையினர் ஷாபாரலி தலைமையில் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காரையூர் கடைவீதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இலுப்பூர்-விராலிமலை

இலுப்பூர் பஸ் நிலையம் பகுதியில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர். இதைப்போல அன்னவாசல் பஸ் நிலையம் அருகே பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

விராலிமலை பகுதியில் ஜெ.தீபா பேரவையினர் மற்றும் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையா தலைமையில் தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதைப்போல விராலிமலை காமராஜர்நகர் பகுதியில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்தையொட்டி அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

மேலும் செய்திகள்