சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எதிரொலி: கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எதிரொலி: கோவை மாவட்டம் முழுவதும் 2500 போலீசார் தீவிர கண்காணிப்பு
கோவை,
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எதிரொலியாக கோவை மாவட்டம் முழுவதும் 2500 போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 மணிநேரமும் ரோந்து பணி
சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று காலை தீர்ப்பு வழங்கியது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கோவை மாநகர பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையம், ரெயில் நிலையம், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர நகரின் முக்கிய பகுதிகளான கோவை டவுண்ஹால், ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், 100 அடி ரோடு, கிராஸ் கட்ரோடு, சிங்காநல்லூர், டவுண்ஹால், சாய்பாபா காலனி, உக்கடம், போத்தனூர், கணபதி, பீளமேடு, குனியமுத்தூர், வெரைட்டிஹால் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் 24 மணிநேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2500 போலீசார் பாதுகாப்புஇதில் கோவை அவினாசி ரோடு பகுதியில் உள்ள கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நேற்று காலையில் இருந்தே 50–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதய தெய்வம் மாளிகை அலுவலகத்தில் குறைந்த எண்ணிக்கையிலே அ.தி.மு.க.வினர் காணப்பட்டனர். அ.தி.மு.க.வில் இரண்டு அணிகள் உள்ளதால், அந்த அணியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் நடவடிக்கைகள் குறித்து போலீசார் கண்காணித்தனர். இது தவிர அதன் அருகில் உள்ள தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்துக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுபோன்று கோவை மாவட்டம் முழுவதும் உள்ள எம்.எல்.ஏ அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகரில் மட்டும் 1500 போலீசாரும், புறநகரில் 1000 போலீசாரும் என சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் 31 பேர் கைதுமேலும் தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி சிலர் சட்டம்–ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதால் கோவை மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள் (லாட்ஜ்கள்), ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் சந்தேகப்படும்படியாக யாராவது தங்கி இருக்கிறார்களா? என போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. லாட்ஜ்களில் சரியான ஆவணங்கள் இல்லாமல் யாரையும் தங்க வைக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் 64 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். நேற்று மேலும் கோவை புலியகுளம், கிணத்துக்கடவு, வடவள்ளி, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, ஆழியார், வால்பாறை, செட்டிபாளையம், துடியலூர், மேட்டுப்பாளையம், கோமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.